கலைஞருக்காகத் தயாராகிய ராஜாஜி மண்டபம்!

காவேரி மருத்துவமனையில் இன்று மதியம் 2.30 மணிக்கே கலைஞருக்குக் கொடுக்கப்பட்ட செயற்கை சுவாசத்தை நிறுத்திவிட்டார்கள் மருத்துவர்கள். சிகிச்சைகளை கிரகித்துக்கொள்ளும் கட்டத்தை கலைஞரது உடல் நிலை தாண்டிவிட்டதால் இனி எந்த சிகிச்சை அளித்தும், பயனில்லை என்ற முடிவுக்கு வந்ததை அடுத்தே ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

இன்று பிற்பகல் 2.30க்குப் பிறகு தமிழே மூச்சான கலைஞர் தனது இறுதி சுவாசத்தில் இருந்தார். இயற்கையான மரணம் என்பது சுவாசத்தின் நீளம் என்பது படிப்படியாகக் குறைவது. உதரவிதானத்திலிருந்து இழுத்து விடப்படும் சராசரியான முழு மூச்சு என்பது இயற்கையான மரணத்தின்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும், நெஞ்சில் இருந்து, பின் தொண்டையில் இருந்து மட்டுமே மூச்சு வரும்.

இந்த நிலையில் கலைஞரின் மூச்சின் நீளம் வெகுவாகக் குறைந்ததை அடுத்து அவரது மரணம் இயற்கையாக நிகழ மருத்துவர்கள் அனுமதித்தனர். மதியம் 2.30 முதல் தனது இறுதி மூச்சுகளை இழுத்து விட்டுக்கொண்டிருந்த கலைஞர் இன்று மாலை 6.10க்கு இறுதி மூச்சினை விட்டு விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்.

கலைஞரின் உடல் காவேரி மருத்துவமனையிலிருந்து இன்று இரவு கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எம்பார்ம் எனப்படும் பதப்படுத்தும் நடைமுறைகள் முடிந்ததும் கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இன்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் உடல் பின்னிரவு இரண்டு மணிக்கு மேல் சிஐடி காலனி இல்லத்தில் சில மணிநேரம் வைக்கப்படுகிறது. அதன் பின் அதிகாலை முதல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி இல்லத்தில் வைக்கப்படும் என்று கோபாலபுரம் இல்ல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.