வளர்ப்பு நாய்களுக்கு நோய் தடுப்பூசி ஏற்றும் பொறுப்பை தட்டி கழிக்கும் கால்நடை திணைக்களம்.!

உள்ளூராட்சி மன்றங்களினால் வளர்ப்பு நாய்களிற்கு போடப்படும் தடுப்பூசியை இடைநிறுத்தி கால் நடைத் திணைக்களத்திடம் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு எங்குமே தடுப்பூசி போடப்படவில்லை. என மாநகர சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களினால் வளர்ப்பு நாய்களிற்கு தடுப்பூசிகள் போடுவது வழமையான செயல்பாடாக இருந்து வந்தது. இருப்பினும் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் மத்திய அரசினால் கால் நடைத் திணைக்களத்திற்கு அது மாற்றப்பட்டது.

உள்ளூராட்சி திணைக்களங்களிடம் குறித்த பணி இருக்கும்போது அது மாநகர சபைகளாகட்டும் நகர சபை பிரதேச சபை என்பன ஒலி பெருக்கி அறிவித்தலுடன் கிராமங்களிற்கு நேரடியாகச் சென்று இத் தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஆனால் அது மத்திய அரசின் கால் நடைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு மாவட்டத்தில் எங்குமே இத் தடுப்பூசி ஏற்றப்படவில்லை. குறித்த திணைக்களத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் இலவசமாக போட முடியும் என்றே அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இன்றுவரை போடப்படவே இல்லை. மாறாக சாவகச்சேரி , தெல்லிப்பளை ஆகிய இரு இடங்களில் மட்டும் குறித்த தடுப்பூசி வளர்ப்பு நாய்களிற்கு இத் திணைக்களம் போடுகின்றது. ஏனைய இடங்கள் எங்குமே இவை போடப்படுவது கிடையாது.

இதன் காரணமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் மக்கள் தனியார் கால் நடை வைத்தியசாலையிலேயே தற்போது விசர்நாய் தடுப்பூசிகளை ஏற்றுகின்றனர். இதற்காக ஒரு முறைக்கு 600 ரூபா பணம் செலுத்த வேண்டும். நாய்களை கொண்டு செல்ல என ஆயிரம் ரூபா செலவாகின்றது.

இதன் காரணமாகவும் பலர் நாய்களிற்கு தடுப்பூசி ஏற்றுவதில் இடையூறு கானப்படுகின்றது.  தடுப்பூசி ஏற்றாத நாய்கள் கடித்தால் நாய் கடிக்கு இலக்கானவர் ஊசி ஏற்றவேண்டும். அத்தோடு குறைந்த்து 3 வாரம் நாயை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறே இந்த நாய்கள் விடயத்தில் உள்ளூராட்சி மன்றம் ஊடாக இலவசமாக போடப்பட்ட ஊசியை மக்கள் இன்று பணம் செலுத்தி பெறுவது மட்டுமன்றி பல அலைச்சலின் மத்தியிலேயே பயனை பெற நிர்ப்பத்திக்கப்படுகின்றனர். என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திருமதி .சிவதாசன் தெரிவித்தார். 
Powered by Blogger.