வடக்கில் தமிழர்களுக்கிடையே இனவாதத்தை கிளப்பிய ஆளுநர்!


வடக்கில் இருக்கும் வைத்தியசாலைகளில் உள்ள இரத்த வங்கியை முப்படை மற்றும் பொலிசில் பணியாற்றும் சிங்கள அதிகாரிகளே தமது இரத்தத்தினால் நிரப்புகின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “ பெரிய மழை பெய்த பின்னர் நிலத்தில் ஈரத்தன்மை இருப்பது போல், வடக்கில் முப்பது வருடங்கள் நடைபெற்ற போரின் பின்னர், ஆங்காங்கே இரண்டு, மூன்று ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படலாம்.இது மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கான அடையாளமோ ஆரம்பமோ இல்லை.

வடக்கில் படையினர் பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டு வந்து இன்று அமைதியான படையினராக மாறியுள்ளனர். வடக்கில் இருக்கும் வைத்தியசாலைகளில் உள்ள இரத்த வங்கியை தமது இரத்தத்தினால் நிரப்புபவர்கள், முப்படை மற்றும் பொலிஸார் ஆகிய சிங்கள அதிகாரிகள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் மக்களுக்கு சிங்கள இனத்தவரின் இரத்தம் கொடுக்கப்பட்டால், அங்கு, தமிழ், சிங்கள இரத்த கலப்பு ஏற்படாதா? என்று நான் வடக்கின் அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்புகிறேன்.

பண்டைய காலத்தில் எமது நாட்டை ஆட்சி செய்த சிங்கள அரசர்கள் இந்தியாவின் மதுரையில் இருந்த இளவரசிகளை பெண்ணெடுத்தனர். அதேபோல், வர்த்தகம் செய்ய இலங்கை வந்த பல முஸ்லிம்கள், சிங்களம் அல்லது தமிழ் பெண்களை மணமுடித்து நாட்டில் குடியேறினர்.

இப்படிப் பார்த்தல், பண்டைய காலத்தில் இருந்தே எமது இரத்தம் கலந்துள்ளது. அத்துடன் வடக்கில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிங்கள பொலிஸ் அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். நாடாளுமன்றமாகட்டும், மாகாண சபையாகட்டும், அவற்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் உறுப்பினர்களுக்கும் சிங்கள பொலிஸ் அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளிடம் தமிழ் பொலிஸார் இல்லை. இது சிறந்த அடையாளம்.

தற்போது வடக்கில் இராணுவத்தினரின் கைகளில் துப்பாக்கிகள் இல்லை. அவர்களிடம் சமாதானத்தின் ஒலிவ் மரக் கிளைகள் உள்ளன. அவர்களே வடக்கில், வைத்தியசாலைகளையும் பாடசாலைகளையும் நிர்மாணிப்பதுடன் கோவில் பூஜைகளுக்கும் உதவி வருகின்றனர் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.