கூரை ஏறிக் கோழி பிடிக்க அழைக்கிறார் தவராசா??

வடமாகாணசபையில் கடந்த 4 வருடங்களும் 9 மாதங்ளும் வினைத்திறனாக செயற்படாத முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால் மட்டும் என்ன செய்வார்?

என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்ப துபோல் முதலமைச்சரின் கருத்து உள்ள தாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று எதிர்கட்சி தலைவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கேள்வி: பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கு வன்முறையை இரண்டு மாதங்களில் அடக்கிக் காட்டுவேன் என முதலமைச்சர் மத்திய அரசிற்குச் சவால் விட்டிருக்கின்றாரே இது தொடர்பாகத் தங்களது கருத்து என்ன?

பதில்:

'கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்' என்றொரு பழமொழி உண்டு.

கடந்த நான்கு வருடங்கள் ஒன்பது  மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாடுகளை வினைத்திறனற்றதாகவும்

அதன் உச்சக்கட்டமாக இன்று அதன் அமைச்சரவையின் செயற்பாடுகளைக் கூட நிறுத்தி வைக்கும் அளவிற்கு மிகவும் கெட்டித்தனமாக செயற்பட்ட முதலமைச்சர் நிச்சயமாக வன்முறையை அடக்கும் விடயத்திலும்   அவ்வாறுதான் செயற்படுவார். 

2016 இறுதிப்பகுதியில் அரச அதிபரினால் முச்சக்கரவண்டிகளிற்கு தூரக்கணிப்பான் பொருத்தப்படல் வேண்டும் என்ற ஒழுங்கு விதி முறையினைக் கொண்டு வரவிருந்த வேளையிலே போக்குவரத்து தொடர்பான விடயங்கள் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் உட்பட்ட விடயமாதலினால்

அவ் விடயப்பரப்பு தொடர்பான விடயங்களில்  அரச அதிபரைத் தடையிட வேண்டாம் என்று கடிதம் எழுதப்பட்டதன் நிமிர்த்தம் அரச அதிபர் அம் முயற்சியினைக் கைவிட்டார். கொழும்பில் ரூ.50.00இற்குச் செல்ல வேண்டிய தூரத்திற்கு யாழில் முச்சக்கர வண்டியில் செல்வதானால் ரூ.250.00 வரை செலுத்த வேண்டியுள்ளது.

ஓர் வர்த்தமானிப் பிரசுரத்தின் மூலம் ஓர் இரவில் செய்யக் கூடிய இவ் வேலையை இரண்டு வருடங்களாகச் செய்யத் தெரியாமலிருக்கும் முதலமைச்சர் இரு மாதங்களில் வன்முறையை அடக்குவார் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபையின் முழுமையான அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களிலொன்று கூட்டுறவுத் துறை. கூட்டுறவுத் துறைக்கு வேண்டிய நியதிச் சட்டத்தினை ஆக்கி இன்று தூர்ந்து போயிருக்கும் கூட்டுறவுத் துறையை ஒழுங்குபடுத்தித் திறமையான நிர்வாகச் செயற்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும்.

இருக்கின்ற அதிகாரங்களினை சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர்  இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா?

முதலமைச்சரின் கடந்த காலச் செயற்பாட்டின்மையின் விளைவாக மாகாண சபை இன்று ஓர் கேலிக்கூத்தாகப் பலராலும் விமர்சிக்கப்படுகின்றது.

மாகாண சபைக் காலப்பகுதியில் முதலமைச்சரினால் எமது அதிகார வரம்பிற்குள் செயற்படுத்தக் கூடிய ஆனால் செயற்படுத்தத் தவறிய

விடயங்களை அடுக்கிக் கொண்டே போனால் ஊடகங்களில் பிரசுரிப்பதற்கு இடமில்லாமல் போய்விடும். அதற்கு மேலாக எமது பிரதேசத்திற்கு வரவவிருந்த எவ்வளவோ அபிவிருத்தித் திட்டங்கள் முதலமைச்சரின் அசமந்தப் போக்கினால்  எம்மை விட்டுச் சென்று விட்டது. அதனால்தான் அவரை நான் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தேன்.

அரசிற்குச் சவால் விட்டிருக்கும் முதலமைச்சர் முதலில் நான் விட்ட சவாலை ஏற்று பகிரங்க விவாதத்திற்கு வந்து கடந்த காலங்களில் மாகாண சபையினை வினைத்திறனாகச்   செயற்பட வைத்தார் என நிரூபித்துக் காட்டி விட்டு பொலிஸ் அதிகாரத்தைக் கோரட்டும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.