த.தே.ம.முன்னணி மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு!

போராடுவது ஒன்றுதான் மீனவர்களின் இருப்பையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி. இந்தப் போராட்டத்தில் மீனவர்களுடன் நாங்களும் இருப்போம். இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையைத் தடைசெய்து தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழிவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவளை செ.கஜேந்திரன் சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது,

பெரும்பான்மை இனத்தவராலும், கற்பிடட்டியில் இருந்து வருகின்ற சகோதர இனத்தவர்களின் தொழில் நடவடிக்கையினாலும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் மீன்பிடி தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அதன் பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசால் எந்தவிதமான ஆக்கபூர்வமான உதவிகளும் வழங்கப்படாத நிலையில், பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி தங்களால் முடிந்தளவு கடன்களைப் பெற்று தொழில்களை மீளவும் உருவாக்கி தொழில் ஈடுபடுகின்ற போது, இலங்கை அரசின் முழுமையான ஆதரவுடன் தென்பகுதியில் இருந்து வருகின்ற மீனவர்கள் நவீன ரக மீன்பிடி உபகரணங்களுடன் சட்ட விரோதமான மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள்.

இதனால் சொந்த மீனவர்களின் தொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு நீடித்து வந்த நிலையில் ஒரு பொறுமையின் எல்லைக்கு வந்தவர்களாக இங்கே பெண்கள் கூட வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை இந்தப் பிரச்சினையின் பூதாகரத் தன்மையினை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இந்தச் சட்ட விரோத தொழில் நடவடிக்கைக்கு இலங்கை அரசு, கடற்படை, நீரியல்வளத்திணைக்களம் அதிகாரிகள் துணை நிற்கின்றார்கள். வேறு வழியின்றி மீனவர்கள் போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குற்றவாளிகளின் கையில் சட்டம் இருக்கின்ற நிலையில் தான் இந்த கடற்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எதிர்வரும் 12 ஆம் திகதி வரைக்கும் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக சொல்லப்பட்டுள்ளது.

அதுவரைக்கும் இந்த மீனவர்களின் போராட்டத்துக்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம். போராடுவது ஒன்றுதான் மீனவர்களின் இருப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான ஒரே வழி. இந்தப் போராட்டத்தில் மீனவர்கள் உடன் நாங்களும் இருப்போம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன் என்றார். 

No comments

Powered by Blogger.