இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளின் நான்காம் நாளான இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஹி சர்னோபத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 22) காலை நடைபெற்ற மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கேர் 585 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ரஹி சர்னோபத் 580 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். இறுதிப் போட்டியில் ரஹி சர்னோபத் முதலிடத்தைப் பிடித்து தங்கத்தை கைப்பற்றினார்.
மனு பாக்கேர் 6ஆவது இடத்தைப் பிடித்ததால் பதக்க வாய்ப்பை இழந்தார். ராஹி சர்னோபத், 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட முழங்கை காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாக்கியில் பொழியும் கோல் மழை
ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் ஆட்டத்தில் இன்று இந்தியா, ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் இந்தியா 26-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் 86 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1932ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அமெரிக்காவை 24-1 என வீழ்த்தியிருந்தது. இதுவரை ஒரே போட்டியில் 24 கோல்கள் அடித்ததே இந்தியாவின் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, மொத்தம் 43 கோல்களைப் பதிவு செய்துள்ளது. இந்தோனேசியாவுடனான முதல் போட்டியில் இந்தியா 17-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.