கேரள பெருமழை பாதிப்பு!

கேரளாவிற்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கேரளாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், வீடு மற்றும் நிலங்களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின். இதுகுறித்து திமுக இன்று(ஆகஸ்ட் 12) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி, வெள்ள நிவாரண நிதியாக 10 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 5 கோடி நிவாரணம் வழங்குவதாகவும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஒரு கோடி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள் துறை அமைச்சர் இன்று ஆய்வு
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களையும் மத்திய உள்துறை அமைச்சர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். கேரள அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கனமழை காரணமாக இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்டவர்களைத் தங்க வைக்க 439 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் பல பகுதிகள் தீவு போன்று மாறியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் , கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஐந்தாவது நாளாக முழு வீச்சில்த் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.