இனி ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு இல்லை!

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டும்தான். அவரது மறைவுக்குப் பின்னர், இசட் பிளஸ் பாதுகாப்பு எந்த தமிழக அரசியல் தலைவருக்கும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள விஐபி மற்றும் விவிஐபிக்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எக்ஸ், ஒய், இசட் மற்றும் இசட் பிளஸ் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு யாருக்குத் தர வேண்டும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதைப் பட்டியலிட்டு, மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களைச் சேகரித்து, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும். அதைப் பரிசீலித்த பிறகே, மத்திய அரசு 'இசட் பிளஸ்' பாதுகாப்பை வழங்குகிறது. இதன்படி, திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பாதுகாப்புப் பணியை 'இசட் பிளஸ்' கமாண்டோ வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். அவரது மறைவுக்குப் பின்னே, அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், குண்டு துளைக்காத வாகனம், இரண்டு பாதுகாப்பு வாகனங்கள், தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) கமாண்டோ வீரர்கள் 24 பேர் எந்திரத் துப்பாக்கியுடன் எப்போதும் உடனிருப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும். இந்திய அளவில், பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 'இசட் பிளஸ்' கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் என்ற அடிப்படையில், 1991ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. கருணாநிதிக்கு 1997ஆம் ஆண்டு முதல் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் உளவுத்துறை அளித்த அறிக்கையின் படி, சுப்பிரமணியன் சுவாமிக்குக் கொடுக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.
2009ஆம் ஆண்டு முதல், அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கமாண்டோ படை பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இசட் பிளஸ் பாதுகாப்பில், தேசிய பாதுகாப்புப் படையின் (என்எஸ்ஜி) வீரர்கள், ஒரு ஷிப்ட்டுக்கு எட்டு பேர் என்ற எண்ணிக்கையில் பாதுகாப்பு அளிப்பார்கள். மூன்று ஷிப்ட்கள் முறையில் மொத்தம் 24 பேர் இதற்கான பணியில் இருப்பார்கள். கருணாநிதிக்கு, 24 கமாண்டோக்கள் பாதுகாப்பு அளித்துவந்தனர். இதை விட எண்ணிக்கையில் சற்றே கூடுதலாக, ஜெயலலிதாவுக்கு 40 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், தமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த ஒரே தலைவர் கருணாநிதி மட்டும்தான். அவரது மறைவினால், தமிழ்நாட்டில் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

No comments

Powered by Blogger.