உயிரி எரிபொருளில் விமானம் இயக்கம்!

விமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்கும் விதமாக, உயிரி எரிபொருள் மூலமாக விமானம் இயக்கும் சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

விமான எரிபொருளின் விலை உயர்வடைந்ததை அடுத்து, விமான நிறுவனங்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் புதிய சோதனையொன்றை இன்று (ஆகஸ்ட் 27) நடத்தியது. டேராடூனில் இருந்து டெல்லி சென்ற விமானமொன்றை, உயிரி எரிபொருள் மூலம் இயக்கிச் சாதனை புரிந்துள்ளனர் ஸ்பைஸ்ஜெட் விமானிகள். இந்த விமானமானது 25 சதவீதம் உயிரி எரிபொருள் மற்றும் 75 சதவீதம் ஒயிட் பெட்ரோல் கொண்டு இயக்கப்பட்டது.

டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத். டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை இந்த விமானம் அடைந்தபோது, அங்கிருந்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஹர்ஷவர்தன், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் அதனை வரவேற்றனர்.

விவசாய எச்சங்கள், உண்ண முடியாத எண்ணெய் மற்றும் மட்கும் திறன் கொண்ட மாநகராட்சி மற்றும் தொழில் துறைக் கழிவுகளைக் கொண்டு இந்த உயிரி எரிபொருளானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவு காட்டாமணக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுப்புறச் சீர்கேடு பெருமளவில் தவிர்க்கப்படும் என்றும், விமானப் பயணக் கட்டணம் மேலும் குறையும் என்றும் தெரிவித்துள்ளது ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம். டேராடூனைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர் – இந்தியப் பெட்ரோலிய நிறுவனமானது, இன்றைய சோதனை முயற்சிக்கான உயிரி எரிபொருளைத் தயாரித்துள்ளது.

விமானத்துக்கான உயிரி எரிபொருளைத் தயாரிப்பதற்காக, காட்டாமணக்கு பயிரிடப்படும் பணிகள் மற்றும் அதிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணிகள் சட்டீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் உயிரி எரிபொருளை 50 சதவீதம் வரை பயன்படுத்தும் வகையில் சோதனை நடத்தப்பட்ட பிறகு, விமானப் பயணக் கட்டணம் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஸ்பைஸ்ஜெட் நிர்வாக அதிகாரி அஜய் சிங்.

No comments

Powered by Blogger.