நிர்மலா தேவி வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் கைதானார். நிர்மலா தேவியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி, நிர்மலா தேவி மற்றும் முருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முருகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று (ஆகஸ்ட் 27) மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட முருகன் தரப்பு வழக்கறிஞர், நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் எந்த இடத்திலும் அவர் நேரடியாக மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைப்பதாகப் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் மூன்று பேரை மட்டும் குற்றவாளியாக்கி வழக்கை முடிக்கச் சதி நடப்பதாகக் கூறினார். விசாரணையை நியாயமாக நடத்த, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். இதைக் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக வரும் 4ஆம் தேதிக்குள் சிபிசிஐடி அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (ஆகஸ்ட் 28) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.