மத்திய நீர்வள ஆணையம்: வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் மீண்டும் தீவிரமடைந்து பெருமழை பெய்துவருவதால் கர்நாடக அணைகளிலிருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டோடுவதால், தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் பெருமழையால், அங்குள்ள அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழு கொள்ளளவை நிரம்பியுள்ளதால், தமிழகத்திற்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நிரம்பியுள்ளது. மேலும், அடுத்த 2நாட்களுக்குள் காவிரியில் 1.40லட்சம் தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கபடுகிறது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய 9 மாவட்டங்களில், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், காவிரி கரையோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார். வெள்ள அபாய எச்சரிக்கையால் ஈரோடு, சேலம், நாமக்கல், போன்ற கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆற்றங்கரையில் குளிக்கவோ, விளையாடவோ, மீன் பிடிக்கவோ வேண்டாம் என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.