சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்குத் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு, அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி 13பேரை கொலைசெய்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றதோடு,50க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கிய குற்றவாளிகள் சட்டத்தின்முன் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து முறையான விசாரணை நடத்தி குற்றமிழைத்த போலீசார் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மத்திய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வற்புறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் மத்திய புலனாய்வுத் துறைக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பப்பட்டது.

இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் கே.எஸ். அர்ச்சுணன் மூலம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை கடுமையாக கண்டித்ததுடன், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டுள்ளார்கள். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இது போராடிய மக்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றியாகும்.

உடனடியாக சிபிஐ இந்த விசாரணையை மேற்கொண்டு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அவர்களை வழக்கு விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை விசிக சார்பில் வரவேற்கிறோம். மற்ற வழக்குகளைப் போல் அல்லாமல் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டிலிருந்து குட்கா முறைகேடு உட்பட பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்குகள் யாவும் இன்னும் விசாரணை மட்டத்திலேயே உள்ளன. அதுபோல காலதாமதம் செய்துவிடாமல் இந்த வழக்கை விரைந்து விசாரித்து நீதிவழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.