கருணாநிதியை நலம் விசாரிக்க வரும் ஜனாதிபதி!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் 5ஆம் தேதி சென்னை வருகிறார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த ஜூலை 28ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேசிய, மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 5) சென்னை வருகிறார். இதனை குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. சென்னை வரும் அவர் வேறு எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

கடிதம் எழுதிய மாணவி: சந்தித்த ஸ்டாலின்

கருணாநிதியின் உடல்நிலை நலம் பெற வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி மிச்சல் மிராக்ளின் கடிதம் எழுதியிருந்த நிலையில், இது திமுகவின் சமூக வலைதள பக்கங்களிலும் பகிரப்பட்டது. மாணவியை காவேரி மருத்துவமனைக்கு இன்று நேரில் அழைத்து ஸ்டாலின் சந்தித்தார். மாணவியிடம் தான் யாரென்று தெரிகிறதா என்று ஸ்டாலின் கேட்க, அதற்கு ஸ்டாலின் என்று மாணவி பதிலளித்தார். அந்த சிறுமி ”தாத்தா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தபிறகு என்னைக் கூப்பிடுங்கள்” என்று கேட்டார். கருணாநிதி உடல் நலம் பெற்று வீடு திரும்பியவுடன், மாணவியை அழைத்து வந்து கருணாநிதியை சந்திக்க வைப்பதாக ஸ்டாலின் அவர்களிடம் உறுதியளித்தார். அவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக்கொள்ள உதவியாளரிடம் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.