வாடிக்கையாளர்களுக்காகவே மாற்றம்!

திரைப்படங்கள் போலவே திரையரங்குகளும் தமிழ் மக்களின் மனங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பிணைந்துள்ளன. காலமாற்றத்தால் திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக மாறும்போது அதில் தங்களது நினைவுகளும் சேர்ந்து இடிபடுவதாகவே மக்கள் உணர்கின்றனர். சென்னையின் ஒரு அடையாளமாக இருக்கும் சத்யம் திரையரங்கம் கைமாறுவதையும் அத்தகைய உணர்வுரீதியான நிகழ்வாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக சென்னையில் முன்னணி திரையரங்காக செயல்பட்டுவரும் சத்யம் நிறுவனத்தின் 77.1 சதவீதம் பங்குகளை பிவிஆர் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ நிறுவனம் இன்று தங்களது வாடிக்கையாளர்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து இந்த முடிவுக்கான காரணத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. “சோதனை முயற்சியாகவே சத்யம், சாந்தம், சுபம் என்ற மூன்று திரைகளைத் தொடங்கினோம். மனதுக்கு நெருக்கமான ஒரு பயணத்தின் தொடக்கமாக அது அமைந்தது. 1999ஆம் ஆண்டு இடவசதி, தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயலாற்றினோம், அடுத்ததாக உணவு மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் அனுபவத்தைப் பூர்த்தி செய்தோம்.

நம்ப முடியாத இந்தப் பயணத்தில் பல மைல் கற்களைக் கடந்துள்ளோம், ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்துள்ளோம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் எங்களை ஊக்கப்படுத்துவதாக இருந்தது, அது உங்களது அன்பும் ஆதரவுமே. இருபது ஆண்டுகளாக இந்த சாதனைகளை நிகழ்த்துவதற்கு நீங்கள் தான் காரணமாக இருந்துள்ளீர்கள். ஒவ்வொரு முறை புதிதாக நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் ஆதரவு அளித்ததோடு ஊக்கமும் அளித்ததால்தான் வளர முடிந்தது” என குறிப்பிட்டுள்ளனர்.

தொழில்ரீதியான காரணங்களுக்காக மட்டும் இந்த முடிவை எடுக்கவில்லை என எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “இது ஒரு பெரிய செயல் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. சிறந்த இரு நிறுவனங்கள் இணையும் போது, வெவ்வேறு படிப்பினைகளும், செயல் முறைகளும் இணையும்போது உங்களது சினிமா அனுபவம் இன்னும் அருமையாக மாறும்” என்று தெரிவித்துள்ளனர்.

திரையரங்குக்குச் செல்வது செலவுள்ளதாகப் பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணம் பார்கிங் கட்டணம். சத்யம் திரையரங்கில் அரசு நிர்ணயித்த விலையிலேயே பார்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களிலும் அந்த நிலை நீடிக்குமா என்பதை இப்போது கூற முடியாது.

No comments

Powered by Blogger.