ஸ்டாலின் உறுதி, மிரட்டிப் பார்க்கும் அழகிரி!

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“முதலில் டைம்ஸ் நவ்க்கு அழகிரி கொடுத்த பேட்டியின் விவரங்களைச் சொல்கிறேன். அப்புறம் விஷயத்துக்கு வருகிறேன். ‘திமுகவில் நான் இணைய விரும்புகிறேனா இல்லையா என்பதைவிட, நான் இணைவதிலோ திமுகவுக்கு வருவதிலோ ஸ்டாலினுக்குத் துளியும் விருப்பம் இல்லை. திமுகவுக்குள் நான் வந்தால் வலிமையான தலைவராக மாறிவிடுவேன் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. நான் கட்சியை உடைக்க வேண்டிய அவசியமே இல்லை. அது தானாகவே உடையும்.

திமுகவில் நடக்கும் விஷயங்களை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அங்கே கட்சிப் பொறுப்புகளை விலைபேசி விற்கிறார்கள். அதனால்தான் கட்சி நிர்வாகிகள் பலருமே ரஜினி கட்சியோடு தொடர்பில் இருக்கிறார்கள். இப்படியே போனால், திமுகவை இப்போது இருக்கும் தலைமை அழித்துவிடும். தலைவர் கலைஞரின் ஆன்மா அவர்களை எல்லாம் சும்மா விடாது’ என்பதுதான் அவர் பேட்டியில் சொல்லியிருந்தது.

அதன் பிறகு, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மனைவி, மகன் மற்றும் மகள் சகிதமாக வந்தார் அழகிரி. அப்போதும் மீடியாவிடம் பேசிய அழகிரி,’கலைஞரின் உண்மையான உடன் பிறப்புக்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள்! நான் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்புகிறார்கள்’ என்று சொன்னார்.

கலைஞர் மறைவுக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்கள் சிலர் அழகிரிக்கு ஆதரவாக இருந்தார்கள். அழகிரியை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும். அவருக்கு திருவாரூர் அல்லது திருப்பரங்குன்றம் தொகுதியை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் எனவும் நினைத்தார்கள். அப்படி அழகிரிக்கு இல்லை என்றாலும் அவரது மகன் துரை தயாநிதிக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கச் சொல்ல வேண்டும் எனவும் சொல்லிவந்தார்கள். இதற்கெல்லாம் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அவர்களே சொன்னார்கள். ஆனால், அது எதுமே நடக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் அழகிரி போர்க்கொடி தூக்க ஆரம்பித்துள்ளார்” என்று அந்த மெசேஜ் முடிந்தது.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “இதற்கெல்லாம் ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?” என்ற கேள்வியை போட்டது.

பதிலை அடுத்த மெசேஜில் போட்டது வாட்ஸ் அப்.

”இப்படியான சிக்கல் வரும். சிக்கலை அழகிரி உருவாக்குவார் என்பதெல்லாம் ஸ்டாலினுக்கு முன்கூட்டியே தெரியுமாம். கலைஞர் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்த அன்றே, ‘அவரு என்ன வேணும்னாலும் பேசுவாரு. குழப்பத்தை உண்டாக்குவாரு. எதுக்கும் யாரும் எந்த பதிலும் சொல்ல வேண்டாம். நாம திருப்பி பேசப் பேசத்தான் பிரச்னை பெருசாகும். அமைதியா விட்டுட்டா அப்படியே அடங்கிப்போயிடும். அவரை அடக்குறதுக்கு ஒரே வழி நாம கண்டுக்காமல் விடுறதுதான். அவரு சொல்லி யாரும் கட்சியில் இருந்து போகவும் மாட்டாங்க. அவரு பின்னாடி நிற்கவும் மாட்டாங்க’ என்று தளபதி உத்தரவிட்டிருக்காரு. ஆனாலும் ஜெ. அன்பழகன் அழகிரிக்கு பதில் சொல்லிவிட்டார்.

இப்போ அழகிரி பேசுற விஷயங்களையும் தளபதி கவனிச்சுட்டுதான் இருக்காரு. ‘நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேனே... அவரு இப்படித்தான் பேசுவாரு என்பது எனக்கு தெரியும். இதை நான் அடுத்த நாளே எதிர்பார்த்தேன். நாலு நாளைக்குப் பிறகுதானே அவரு பேசியிருக்காரு... பேசிட்டுப் போகட்டும். அவரு பின்னாடி போகவே ஆளு இல்லை. இதுல எங்கே இவரு சொல்லி ரஜினி பின்னாடி போகப் போறாங்க? எது நடந்தாலும் பார்த்துக்கலாம். இனி அவருக்காகப் பணிந்து போற ஐடியா இல்லை...’ என்று திட்டவட்டமாக சொல்லிட்டாரு என்று சொல்கிறார்கள்” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு, ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப். 

No comments

Powered by Blogger.