ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி!

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணியை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆலை மூடப்பட்டது.

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாகத் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு, கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை இன்று (9.8.2018) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் வழக்கில் தன்னையும் எதிர்மனுதாரராக இணைத்து கொள்வதற்காக இடைக்கால மனு தாக்கல் செய்திருந்த வைகோ, தன் மீது ஸ்டெர்லைட் நிர்வாகம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரித் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கோரிக்கை வைத்தார். ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை சட்ட விதிகள் எதையும் மீறவில்லை என்றும், நீர் மாசுபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும், தூத்துக்குடி வளர்ச்சிக்காக கொடுத்த 100 கோடி ரூபாய் நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டினார். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமாட்டோம் என உறுதி அளித்த அவர் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிர்வாகப் பணிக்காக மட்டும் ஆலையை திறக்க வேண்டும், உற்பத்தி பணிகளை செய்யக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறி உள்ளது.

தீர்ப்பாயத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த வைகோ “ஸ்டெர்லைட் நிர்வாகம் கொடுத்திருக்கும் ஆட்சேபணை மனுவில் நான் அரசியல் விளம்பரத்திற்காக மனு தாக்கல் செய்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அரசியல் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் தொடர்ந்த வழக்கில்தான் 2010 செப்டம்பரில் 28இல் ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஆலை திறக்கப்பட்டது. இதை எதிர்த்து 22 அமர்வுகளில் நானும் தேவதாஸ் அவர்களும் கலந்துகொண்டிருக்கிறோம்” என்று பேசிய வைகோ நீதிமன்றம் தன்னை பாராட்டியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் “தமிழகத்தின் தென்பகுதி அழிந்துவிடும் என்பதால்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்கு எதிரான என்னுடைய மனு விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதியைக் கேட்டுக்கொண்டேன். நீதிபதிகள் என்னுடைய வாதங்களை பின்னர் கேட்பதாகக் கூறியிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.