மூன்றாவது தங்கத்தை சுட்டுப்பிடித்த சிறுவன்!

ஆசிய விளையாட்டு தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஆகஸ்ட் 21) துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம் உட்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா ஆகியோர் பங்கேற்றனர். முதல் சுற்றின் முடிவில் சவுரப் சவுத்ரி இரண்டாவது இடத்தையும், அபிஷேக் வர்மா நான்காவது இடத்தையும் பிடித்தனர். 14 ஷாட்களின் முடிவில் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட சவுரப், தொடர்ந்து போராடி கடைசி சுற்றில் 240.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் 16 வயதான சவுரப் சவுத்ரி, இத்தொடரில் இந்தியாவின் மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மற்றொரு வீரர் அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் படித்து வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
முன்னதாக இந்தியாவுக்கு, மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ ஃப்ரீஸ்டைலில் பஜ்ரங் புனியா முதல் தங்கத்தையும், 50கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வினேஷ் போகத் இரண்டாவது தங்கத்தையும் பெற்றுத் தந்திருந்தனர். தற்போது பதக்கப் பட்டியலில் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களுடன் இந்தியா 7ஆவது இடத்தில் உள்ளது.
டென்னிஸ்: காலிறுதியில் இந்தியா
டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரைனா அங்கிதா ஜப்பானின் ஹோசுமி எரியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஹோசுமியை வீழ்த்தி அங்கிதா காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறவுள்ள காலிறுதியில் அங்கிதா, ஹாங்காங்கைச் சேர்ந்த யூடிஸ் வாங்சாங்கை எதிர்த்து விளையாடவுள்ளார்.
கபடி: இந்தியா வெற்றி
பெண்களுக்கான கபடி போட்டியில் க்ரூப் A பிரிவு ஆட்டத்தில் இந்தியா இந்தோனேசியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் இந்தியா 55-22 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய மகளிர் கபடி அணி, இந்தத் தொடரில் பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஹாக்கி: இந்தோனேசியாவைப் பந்தாடியது இந்தியா
ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, இந்தோனேசியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் இந்தியா கோலை நோக்கி அடித்த ஷாட்களில், 43 சதவிகித ஷாட்கள் கோலாக மாறியது. அதுமட்டுமின்றி 11 பெனால்டி வாய்ப்புகளில், 6 கோல்களைப் பதிவு செய்தது. இறுதியில் 17-0 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி ஆசிய போட்டிகள் வரலாற்றில் தனது அதிகபட்ச வெற்றியைப் பதிவு செய்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.