வரலட்சுமி விரத பூஜை முறைகள்!

மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

வரலட்சுமி விரத பூஜை முறைகள்
பெண்கள் கொண்டாடும் முக்கியமான விரதங்களில் வரலட்சுமி விரத பூஜை குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமி வரங்களை அள்ளிக்கொடுப்பதற்கு பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் லட்சுமியை நினைத்து மேற்கொள்ளும் இந்த விரதம் வரலட்சுமி விரதம் என்று அழைக்கப்படுகிறது.

எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்குகொள்வர் என்றாலும் திருமணமான பெண்கள் இந்த விரதத்தை தங்கள் மாங்கல்யம் கெட்டியாக இருக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்கவும் இந்த விரதத்தை அதிகம் மேற்கொள்வர்.

அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்கள் எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும்போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி, என்பதை போல மகாலட்சுமிக்கு அருகம்புல்.

அதன் மீது மகாலட்சுமிக்கு அதிக பிரியம் உண்டு. ஆவணி மாத சுக்கிலபட்ச வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று சந்தியாகால வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. முதலில் வீட்டை நன்கு சுத்தமாகக் கழுவி மாக்கோலமிட்டு விளக்கேற்றி வீடெல்லாம் வாசனை புகை நிரம்பியிருக்கச்ச செய்ய வேண்டும்.

கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இட வேண்டும். கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும். மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும். நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும். இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான். நம் நிவேதனம் உண்ண வேண்டும். அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேஷம். அதனால் அன்ன பூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.

இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும். வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சௌபாக்கியங்களையும் பெற்று அஷ்ட ஐஸ்வர்யத்துடன் வாழலாம். வரதலட்சுமி விரதம் மேற்கொள்ளும் நாள் முழுவதும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம், போன்றவற்றை கூறிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு பக்தி சிரத்தையுடன் வரலட்சுமி விரதம் மேற்கொள்வதனால் மாங்கல்ய பலம், செல்வச் செழிப்பு, ஐஸ்வர்யங்கள் கிடைத்து வாழ்வு மேலோங்கும் என்பது ஐதீகம்.

வரலட்சுமி பூசையைச்செய்து முடித்த பிறகு, நோன்புக்கயிற்றை வலக்கையில் மற்றொரு சுமங்கலியைக் கொண்டோ, தாமாகவோதம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அடுத்து அம்மனைத் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஒரு தட்டில் ஆரத்தி கரைத்து வைத்து, அதில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். (ஆரத்தி என்பது, சிறிது சுண்ணாம்பு, மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியன தண்ணீரில் கரைக்கப்பட்ட கலவையாகும்)

பூசை முடிந்த பிறகு புரோகிதருக்குப் பாயசம், தாம்பூலம், பழம், தேங்காய் மூடி, தட்சணை, பலகாரங்கள் முதலியனவற்றைக் கொடுத்து அனுப்புவது வழக்கம். பூசை செய்தவர் அன்று இரவு உண்ணக் கூடாது. நண்பகலில் தான் நல்ல மங்கலகரமான இனிய விருந்து உண்டாயிற்றே இரவில் ஏதாவது பலகாரம் உண்டால் போதும். பூசையன்று மாலையில் அம்மனுக்கு புதியதாக ஆரத்தி கரைத்து வைக்க வேண்டும். தீபம் ஏற்றியவுடன் சில சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம், பூ, இனிப்புகளை வழங்க வேண்டும்.

மறுநாள் காலையில் புனர்பூசை செய்ய வேண்டும். புனர்பூசைக்குரிய மந்திரங்கள் புத்தகத்திலேயே இருக் கும். காலையில் பழங்களை வைத்து நிவேதனம் செய்து கொள்ளலாம். புனர்பூசை தினத்தன்று மாலையில் சூரியன் மறைந்தபுடன் விளக்கு ஏற்றி வைத்து, ஆரத்தி எடுத்து, நைவேத்தியம் செய்ய வேண்டும். அதற்கு கொண்டைக் கடலை அல்லது கடலைப்பருப்புச்சுண்டல் செய்வது வழக்கம்.

சுண்டலை அம்மனுக்கு நைவேத்தியம் செய்து, ஆரத்தி தீபத்தை அம்மனுக்கு சுற்றி, கற்பூரம் ஏற்ற வேண்டும். பின்பு அம்மன் கலசத்தைத் தொட்டுச் சிறிது நகர்த்தி வைத்து விட வேண்டும். அடுத்து சுமங்கலிப் பெண்கள் பலரும், ஒருவராக அம்மனைப் பற்றி தமக்குத் தெரிந்த பக்திப் பாடல்களையும் வடமொழி துதிப்பாடல்களையும் சுலோகங்களையும் பாடுவர்.

இறுதியாக, வந்தவர்களுக்குத் தாம் பூலம் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு அந்த அம்மன் கலசத்தை எடுத்து, அரிசி வைத்திருக்கும் தகர டப்பாவிலோ குதிரிலோ வைக்க வேண்டும்.

வரலட்சுமி அம்மன் இருக்குமிடத்தில் எதுவும் எப்போதும் நிறைவாகவே இருக்கும் என்பது ஒரு தெய்வ நம்பிக்கை. அது நாளடைவில் ஐதீகமாயிற்று
கலசத்தின் மீது வைத்திருந்த தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்துப் பாயசம் செய்வர், அதிலுள்ள அரிசியையும் சமையலுக்குப் பயன்படுத்துவர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.