திலீபன் – 2018: திரைப்பட விழாவும் இசை வேள்வியும்

கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று.
அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது.



உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். “திலீபனின் நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஏனைய திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடவில்லையா? அங்கெல்லாம் ரசிகர்கள் படம் பார்க்கவில்லையா?” என்று.

அதற்குத் திரைப்பட விழாவை விமர்சித்தவர்கள் பின்வருமாறு கூறினர். “வழமையாக திரை அரங்குகளில் படம் காட்டுவது வேறு உலகத் திரைப்பட விழா என்பது வேறு. அது ஓர் அனைத்துலக வைபவம். உலக புகழ் பெற்ற திரையுலக வல்லுனர்கள் அதில் கூடுவார்கள். அந்நாட்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி உலகத்தின் கவனம் குவியும். எனவே அப்படி ஒரு விழாவை திலீபனின் நாட்களில் நடத்த கூடாது” என்று. அதே சமயம் விழாவை ஆதரிப்பவர்கள் பின்வருமாறு கேட்டார்கள் “நினைவு நாள் என்று பார்த்தால் வருடத்தில் யாராவது ஒரு தியாகியின் நினைவு தினம் வரும். இதில் எந்த நினைவு நாள் பெரியது? எந்த நினைவு நாள் சிறியது? இதில் எந்த நினைவு தினத்தில் விழாக்களை நடாத்தலாம்? எந்த நினைவு தினத்தில் நடத்தக் கூடாது? எனவே நினைவு நாள் என்று பார்த்தால் கொண்டாட்டங்களையோ விழாக்களையோ நடத்த முடியாது” என்று. இக்கேள்விகளுக்கு திரைப்பட விழாவை விமர்சித்தவர்கள் பின்வருமாறு பதில் கூறினர் “திலீபனின் தியாகமும் ஏனையவர்களின் தியாகமும் ஒன்று தான். ஆனால் திலீபன் இறந்த விதம் கொடுமையானது. அவர் நீரின்றி உணவின்றி படிப்படியாக இறந்தார். அவரது உயிர்பசை மெல்ல மெல்ல உலர்ந்து கொண்டு போன நாட்களில் யாழ்ப்பாணத்தை ஒரு மையமாக மேலுயர்த்தும் திரைப்பட விழாவை நடத்துவது சரியா?” என்று முடிவில் மேற்கண்டவாறான வாதப் பிரதிவாதங்களின் விளைவாக உலகத் திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்கள் இம்முறை இவ்விழாவை திலீபனின் நாட்களிற்கு பின் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஓர் அனைத்துலக அளவிலான திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்கள் ஒரு தியாகியின் நினைவு நாட்களுக்கு மதிப்பளித்து அதன் கால ஒழுங்கை மாற்றியமைத்திருக்கிறார்கள். ஆனால் உள்ளுர் அரசியல் வாதிகளோ அத்தியாகியை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.

இம்முறை திலீபனைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் யாவும் பிரதானமாக இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டிருந்தன. முதலாவது நினைவு கூரும் அதிகாரம் யாருக்கு உண்டு என்பது. இரண்டாவது, நினைவுத்தூபி மீது யாருக்கு உரித்து அதிகம் என்பது. மாநகரசபை அந்த இடம் தனக்கு சொந்தம் என்று கூறியது. நீதி மன்றத்திலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நினைவுகூர்தலுக்கான ஏகபோகத்தையும் அது கோரியது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலிலும் அவ்வாறான சர்ச்சை எழுந்தது. நினைவு கூர்தலுக்கான அதிகாரம் யாருக்கு உண்டு? அதை யார் ஒழுங்குபடுத்தலாம்? என்பதே அங்கு பிரச்சினையாக்கப்பட்டது. ஆனால் நினைவு கூர்தலென்பது ஓர் அதிகாரமில்லை.

அதில் ஏகபோக உரித்துக் கேட்பவர்கள் அதை ஒர் அதிகாரமாகக் கருதக்கூடும்.  கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை ஒழுங்கு படுத்திய மாணவர்கள் கறுப்பு சட்டை அணிந்தபடி நினைவு தூபியின் நான்கு புறமும் விறைப்பாக ஒரு வித சிப்பாய்த் தனத்தோடு நின்ற விதம் அது அதிகாரமா? எனக் கேட்கத் தோன்றியது.

நினைவு கூர விரும்புவோரை பிடித்திழுத்து பின்னுக்கு நகர்த்தும் போது அங்கே அது ஓர் அதிகாரமாகப் பார்க்கப்பட்டது.  அது மட்டுமல்ல நினைவு கூரலை தத்தெடுக்கத் துடிக்கும் அரசியல் வாதிகள் ஒரு கூட்டுத்துக்கத்தைக் கொத்துவாக்குகளாக மாற்றி அதன் இறுதி விளைவாக மக்கள் அதிகாரத்தை பெற விளைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் ஒரு அதிகாரம்தான். நினைவிடத்திற்கு உரிமை கோரி அறிக்கை விடும் அரசியல்வாதிகளும் அதை ஓர் அதிகாரமாகவே பார்க்கிறார்கள்.

ஆனால் நினைவு கூர்தல் ஓர் அதிகாரமல்ல. அது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு மட்டுமல்ல. அது சில நிமிட நேர அனுஷ்டானம் அல்ல. அது ஒரு சிறு திரள் நிகழ்வுமல்ல. அது துக்கிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அது ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு போராட்டம், இன்னமும் முடிவுறாத ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி. எனவே அதை நினைவிடத்தோடு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது. அதை நினைவு நாளோடும், நினைவுத் தூபியோடும் நினைவு கூரும் நேரத்தோடும் மட்டுப்படுத்தக் கூடாது. ஒரு நினைவுச் சுடரோடும், ஒரு பூவோடும்; அதை மட்டுப்படுத்த கூடாது.

மாறாக அது சாராம்சத்தில் ஒரு வாழ்க்கைமுறை. ஒரு தியாகியை நினைவு கூர்வதென்பது அதன் முழுமையான பொருளில் அவரைப் போல வாழ்வதுதான். அந்தத் தியாக முன்னுதாரணத்தை பின்பற்றுவதுதான் இதற்கு நினைவிடமோ நினைவு தூபியோ ஒப்பீட்டளவில் முக்கியமில்லை. நினைவுத்தூபி என்பது ஒரு குறியீடு. ஒரு மையம் அவ்வளவுதான்.

நினைவு கூர்தலை ஒரு சம்பவமாகக் குறுக்கிப்பாக்கும் அரசியல் வாதிகள் அந்த நேரத்தில் ஒரு சுடரை ஏற்றி பூக்களைத் தூவி படங்களை எடுத்து ஊடகங்களில் போடுவதோடு தமது கடமை முடிந்து விட்டதென்று கருதக் கூடும். ஆனால் தியாகிகளின் நினைவை தமது வாழ்நாள் முழுதும் சுமந்து செல்பவர்களுக்கு அவ்வாறான படம் காட்டுதல்கள் முக்கியமில்லை.

துர்ரதிஸ்டவசமாக கடந்த 09 ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியலில் அனேகமான அரசியல் நிகழ்வுகள் படங்காட்டுபவைகளாகவே காணப்படுகின்றன. ஜெனீவாவிற்குப் போவதிலிருந்து நினைவுத் தூபிக்குப் போவது வரை எல்லாமே படம் காட்டுதல்தான்.

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பெற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானம் கொடுத்து அதை முகநூலில் போடுவதும் படம் காட்டுதல்தான்.  இத்தகைய படம் காட்டும் அரசியலே தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்கிறது. மக்களை செயலற்ற பார்வையாளர்களாக வைத்திருக்கிறது. படத்திற்கு சுடரேற்றி பூப் போடுவதோடு தமது தேசிய கடமை முடிந்தது என்று பலரும் கருதுகிறார்கள்.

கடந்த புதன்கிழமை திலீபனின் நாளன்று அவரது நினைவுத் தூபியில் கூடியதும் சிறிய கூட்டமே. அதைவிடப் பல மடங்கு பெரிய கூட்டம் அதற்கு சில நாட்களுக்கு முன் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நான்கு நாட்களாகக் கூடியது. கம்பன் கழகத்தின் இசை வேள்வியே அது. திலீபனின் நினைவுத் தூபியிலி;ருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் அப்பெருங்கூட்டம் திரண்டது.

நினைவு கூர்தல் எனப்படுவது அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அதிகளவில் பங்குபற்றும் ஒரு சிறுதிரள் நிகழ்வு அல்ல. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அது ஒரு பெருந்திரள் நிகழ்வாக இருக்க வேண்டும். அது ஆகக்கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதென்றால் ஈழத்தமிழர்கள் ஆகக்கூடிய பட்சம் பெருந்திரளாக வேண்டும். கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிரான கவசமும் அதுதான். எனவே நிiவு கூர்தல்களில் எப்படி பெருந்திரள் வெகுசன நிகழ்வுகளாக ஒழுங்குபடுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். சுடரேற்றுவதற்கும் பூப்போடுவதற்குமப்பால் நினைவு கூர்தலை வித்தியாசமாக திட்டமிடலாம்.

உதாரணமாக நினைவு கூர்தலை ஓர் அறிவியல் நிகழ்வாக மாற்றலாம். அதில் நினைவுப் பேருரைகளை ஒழுங்குபடுத்தலாம். தமிழ் மக்கள் மத்தியில் அறிவியல் அரங்குகளில் சனத்திரள் பெருகுவதில்லை. அதற்கென்று வரையறுக்கப்பட்ட ஒரு தொகையே வரும். பெருந்திரள் மக்களைக் கூட்ட முடியாது போனாலும் தியாகிகளின் பெயரால் சமூகத்திற்குத் தேவையான அறிவாராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பது என்பது நீண்டகால நோக்கில் உன்னதமானது. முன்னுதாரணமானது. தமிழ் மக்களின் அரசியலை அறிவியல்மயப்படுத்துவதற்கு அது மிக அவசியம். இனப்படுகொலைக்கு எதிரான அனைத்துலக நீதியைப் பெறுவதென்றால் தமிழ் மக்களின் அரசியலை ஆகக்கூடிய பட்சம் அறிவியல்மயப்படுத்த வேண்டும். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலில் அறிவுதான் ஆயுதம், அறிவுதான் பலம், அறிவுதான் சக்தி, அறிவுதான் எல்லாமும். இது ஒரு வழி.

மற்றொரு வழி பெருந்திரள் மக்களை கவரும் விதத்தில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தலாம். உதாரணமாக இசை அரங்குகளை ஒழுங்கு படுத்தலாம். இறந்தவர்களை நினைவு கூர இசையும் ஒரு மகத்தான் உபகரணமாகும். இசை மேதைகளைக் கொண்டு வந்து தியாகிகளின் நினைவாக இசையரங்குகளை ஒடுங்குபடுத்தலாம். நல்லை இசை மனிதர்களை மாண்புறச்செய்யும். தியாகிகளை கௌரவப்படுத்தும். இசை அஞ்சலி நினைவுகூர்தலைப் புனிதப்படுத்தும்.

மூன்றாவது வழி நினைவு கூர்தலை ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாற்றலாம் இசை நிகழ்ச்சிகளைப் போல வேறு கலை நிகழ்ச்சிகளையோ, பண்பாட்டு நிகழ்ச்சிகளையோ ஒழுங்கு படுத்தலாம். உலகம் முழுவதிலுமுள்ள கீர்த்தி மிக்க படைப்பாளிகளையும், கலை மேதைகளையும் அங்கே கூடச் செய்யலாம். இதன் மூலம் சனமும் பெருகும். நினைவு கூர்தலுக்கு ஓர் அனைத்துலகப் பரிமாணமும் கிடைக்கும்.

நாலாவது வழி நினைவுகூர்தலை ஈழத்தமிழர்களுக்கு மட்டும் உரியதாகச் சுருக்காமல் தமிழ்ப்பெரும் பரப்பிற்கு விரிக்கலாம். குறிப்பாக தமிழகம், டயஸ்பொறா, தாயகம் ஆகிய மூன்று களங்களும் சங்கமிக்கும் நிகழ்வுகளாக அவற்றைத் திட்டமிடலாம். வௌ;வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்தாலும் தமிழ்மக்களை இணைக்கும் ஒரு பெரும்புள்ளி அது. குறிப்பாக இனப்படுகொலையை நினைவுகூரும் போது அதனை தமிழ்ப் பெரும்பரப்பிற்குரியதாகவே திட்டமிடவேண்டும். அப்பொழுதுதான் நாடுகடந்து வாழ்ந்தாலும் ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பது எப்படி? ஒரு தேசமாக வாழ்வது எப்படி? போன்றவற்றுக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்கலாம்.

எனவே நினைவு கூர்தல்களை எப்படி பெருந்திரள் நிகழ்வுகளாக ஒழுங்குபடுத்துவது என்பதைக் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த திங்களிரவு நல்லூர் வீதியால் போய்க்கொண்டிருந்தேன். துர்க்கா மணி மண்டபத்தில் இசைவேள்வி நடந்து கொண்டிருந்தது. இந்திய இசை மேதைகளின் கச்சேரிகளை ரசிக்க வந்த சனத்திரளால் மண்டபம் பிதுங்கி வழிந்தது. தெரு நீளத்திற்கும் இரு கரைகளிலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

திலீபனின் நினைவு நாளில் உலகத் திரைப்பட விழாவை ஒழுங்கு படுத்தியதைக் குறித்து எதிர்க்குரல் எழுப்பிய அனேகரின் கவனத்தை இது ஈர்த்திருக்கவில்லை. கம்பன் கழகம் வழமையாக ஆண்டுதோறும் இசை வேள்விகளை நடாத்துவதுண்டு. இறந்தவர்களின் நினைவாகவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம். கம்பன் கழகத்தின் இசை வேள்வியில் ஒவ்வொரு இசையரங்கும் இறந்து போன இசைக்கலைஞர்களின் பெயரால் அழைக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். திலீபனின் நினைவு நாளில் இசை வேள்வியை ஒழுங்கு செய்தமை தற்செயலா இல்லையா என்று தெரியவில்லை. நிச்சயமாகத் திலீபன் இந்தியப் பண்பாட்டிற்கு எதிராகவோ அதன் மிகச் செழிப்பான இசைஞான மரபிற்கு எதிராகவோ உண்ணாவிரதமிருக்கவில்லை. திலீபனைப் போற்றி இந்தியக்கலைஞர்கள் பாடியிருக்கிhறர்கள். கம்பன் கழகத்தின் இசை வேள்வியிலும் அப்படிப்பட்ட இசை மேதைகளின் கச்சேரிகள் இடம்பெற்றன. அதை ரசிப்பதற்கு யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். அது ஒரு பெரும் கூட்டம். யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கம் இசை வேள்விகளையும், பட்டிமன்றங்களையும் இவை போன்ற நிகழ்ச்சிகளையும் நாடிச் செல்கிறது. இவ்வாறான நிகழ்வுகளில் திரளும் பெருங்கூட்டத்தோடு ஒப்பிடுகையில் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆகிய இரண்டையும் தவிர ஏனைய பெரும்பாலான நினைவு கூர்தல்களில் மிகச் சிறிய அற்பமான தொகையே கூடுகிறது.

கடந்த திங்களிரவு இசை வேள்வியை விலத்திக்கொண்டு பருத்தித்துறை வீதியில் ஏறினேன். அப்பகுதியெங்கும் சிங்களப் பயணிகள் செறிவாகக் காணப்பட்டார்கள். அவர்களை ஏற்றி வந்த பேரூந்துகள் வரிசையாக நின்றன. திலீபனின் நினைவுத் தூபி அமைந்த தெருவளைவு றியோ கிறீம் ஹவுஸின் ஒளி வெள்ளத்தின் பின்னணியில் காட்சியளித்தது. திலீபனின் நினைவிடமும் அருகிலிருந்த தற்காலிக பந்தலும் ஒளிகுன்றி ஆளரவமின்றிக் காட்சியளித்தன. இருண்ட பந்தலில் ஒரு சிறு சுடர் அனாதையாகத் துடித்து கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.