தீர்ப்பிற்கு பின் 7 தமிழர்களும் எடுத்துள்ள முக்கிய முடிவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட ஏனைய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வது உறுதி என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

எனினும் மத்திய அரசு இதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. விதி எண் 161இன் படி தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் என்று நேற்று தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அவர்கள் ஆளுநரிடமும், முதல்வரிடமும் கருணை மனுவை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆளுநரே இறுதி முடிவெடுக்க வேண்டும்.

ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு ஆளுநர்களிடமும் இந்த 7 தமிழர்களும் கருணை மனுவை அளித்து இருக்கிறார்கள். இருப்பினும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.

ஆனால் இன்று “தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம்” என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதேவேளை, ஏழு தமிழர்களினதும் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பிற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் வந்துகுவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.