யாழில் 27 வருடங்களின் பின் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தை பார்த்து சமூகத்தினர் கண்ணீர்!

யாழ்ப்பாணத்தில் 27 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தை பார்த்து பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில், குரும்பசிட்டியில் 12 அரை ஏக்கர் காணியும், ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாமும், கலைமகள் மகா வித்தியாலயம் அமைந்துள்ள காணிப்பகுதி ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து குறித்த பாடசாலையை பார்வையிடுவதற்காக பழைய மாணவர்களும் பாடசாலை சமூகத்தினரும் மற்றும் பொது மக்களும் நேற்று படையெடுத்து சென்றிருந்தனர்.

அங்கு சென்று பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. குறித்த பாடசாலையின் மாடிக் கட்டடங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அஸ்திவாரத்துடன் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலையில் காணப்பட்ட 4 மாடிக்கட்டடங்கள் ஒன்று கூட தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களுக்கு முன் தரம் 5 மாணவர்கள் கல்வி பயின்ற சிறிய கட்டடம் ஒன்று மாத்திரமே காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் அவ்விடத்தில் ஒரு அரச மரத்தை மட்டும் நன்றாக வளர்த்து அதன் கீழ் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.