எட்டு வழிச் சாலை: நிலம் கையகப்படுத்தத் தடை!

சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி சிவஞானம் நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.
இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், வழித்தடத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் திட்டத்தை இறுதி செய்யும் வரை நிலக் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உறுதியளித்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டு திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, சென்னை சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சட்ட விரோதமாக மரங்கள் வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாகவும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும், மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட வனத்துறை அதிகாரிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.