அவன் நினைவுகளில் ஓர் நீண்ட பயணம்[3 ]

கனத்த இரவொன்றில் நிஷப்தத்தை துணைக்கு அழைத்தபடி மனமுகடுக்கிடையில் நுரைத்தெழும் நினைவுகளை அள்ளி பருகிக்கொண்டு யாசகம் செய்யும் வாசகனாய் இருளினில் உன் முகம் தேடுகின்றேன்!

நீளும் நினைவுகளில் பூரித்தெழும்
உன்மீதான பிரியங்களைஅள்ளியெடுத்து அகம் முழுவதும் பூசிக்கொள்ளத்
தத்திதாவி அடர்கொண்ட பிரியங்கள் கீழே வீழ்கின்றன.

வீழ்கின்ற பிரியங்கள் மெளனங்களை பிரசவிக்க யாக்கை வெப்பம்கொண்டு
ஒழுக ஒரு துளிகாதலும் சேர்ந்தொழுகி  மரணம்  புணர துடிக்கிறதே ஆதித்யா!

ஆதித்யா  உன்னைப்போலவே
என்னை கிரங்கடிக்கவும் மீட்சி பெறவைக்கவும் இவற்றுக்கு கற்றுக்கொடுத்தது யார்?

எனைக்கொஞ்சம் சற்றுத் திரும்பிப்பாரேன் ஆதித்யா!
அன்று   நீ  மனச்சாலையில் நீண்டு உறங்கிய பொழுதுகள் தரும்  ஞாபகங்களால் இன்று நான் போதிமரத்தடியில் அமர்ந்து புத்தனாகி பேதலிப்பதை உணர்வாயோ!

ஆதித்யா கொஞ்சம் பொறு...
என் அறையினுள் இருக்கும்
 நாட்காட்டி தன் இதயத்தை அடித்துக்கொண்டு ஏதோ சொல்ல முற்படுவது போல் உள்ளதே !
ஓஓ... இன்று நாம் சந்தித்த நாளமாமே ஆதித்யா!

கவிப்பிரியை சுஜனி

[யாக்கை-உடம்பு]

[பெயர் மற்றும் வரிகள் யாவும்
      கற்பனையே]

தொடரும் கவிதையாய்

No comments

Powered by Blogger.