இந்தியாவுக்குக் காத்திருக்கும் ’அக்னி பரீட்சை’!

இந்தியாவின் காலுக்குக் கீழே இருக்கிற மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியாவின் மறைமுக ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றிருக்கிறார்.

சீனா சார்பாளராக இருந்த அதிபர் யாமீன் தோற்கடிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர வெற்றியாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில் இந்தியாவின் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக இருக்கிற பூடானிலும் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலத்தீவில் செலுத்தப்படக் கூடிய ராஜதந்திரத்தைவிட பூடான் தேர்தலில் மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பூடானைப் பொறுத்தவரை இந்தியா-சீனா இடையே சிக்கிக் கொண்டிருக்கிற ஒரு குட்டி நாடு. 1949-ம் ஆண்டு இந்தியா- பூடான் இடையே உருவான ஒப்பந்தமானது, அந்த நாட்டின் வெளியுறவு என்பது இந்திய வழிகாட்டுதல்களின் படி அமைய வேண்டும் என்பதுதான். அதையே இன்றுவரை பூடானும் கடை பிடித்து வருகிறது.

டோக்லாம் உள்ளிட்ட சில பகுதிகளை தாங்கள் எடுத்துக் கொண்டு வேறு சில பகுதிகளைத் தருவதாக சீனா எத்தனையோ முறை ஆசைவார்த்தை காட்டியும் பூடான் அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. இந்த கோபத்தில்தான் டோக்லாம் பகுதியில் சீனா ஆக்கிரமிக்க முயல இந்திய ராணுவம் கடந்த ஆண்டு அங்கே களமிறங்கியது. இதனால் இந்தியா-சீனா யுத்தம் ஏற்படும் அச்சமும் ஏற்பட்டது.

அது சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது. ஏனெனில் டோக்லாமை முன்வைத்து ஒரு யுத்தம் நடைபெற்றால் இந்தியாவின் ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்களுக்குமே பேராபத்து என்பதுதான்.

இந்திய பாதுகாப்பு தளங்களில் கையாளப்படும் ஒரு சொல் ‘சிக்கன் நெக்- கோழிக் கழுத்துப் பகுதி. அதாவது இந்தியாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பையும் வடகிழக்கு மாநிலங்களையும் இணைக்கக் கூடிய பகுதிதான் இந்த கோழிக் கழுத்து பகுதி. இதன் வெகு அருகில்தான் டோக்லாம் இருக்கிறது. டோக்லாமில் சாலை அமைத்து அதனை சீனா தனது கட்டுப்பாட்டில் ஆக்கிரமித்துக் கொண்டால் இந்தியாவின் கோழி கழுத்துப் பகுதிக்குப் பேராபத்து... சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிற ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவில் இருந்து துண்டிக்கப்படக் கூடிய நிலை உருவாகும். அதனால்தான் டோக்லாம் விவகாரம் பெரும் பதற்றமாக இருந்தது.

இருதரப்பு பேச்சுக்குப் பின் டோக்லாம் பதற்றம் தணிந்தது. ஆனால் அது நீர் பூத்த நெருப்புதான். இந்த நிலையில்தான் பூடானில் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மன்னராட்சி கோலோச்சும் பூடானில் 2007ஆம் ஆண்டு முதல் ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 3ஆவது பொதுத் தேர்தல். பூடானின் தேசிய சட்டசபை அல்லது லோக்சபா எனப்படும் கீழவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 47. மேலவையில் மொத்த உறுப்பினர்கள் 20. இதில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களாகவும் 5 பேர் மன்னரால் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருப்பர்.

பூடான் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டத்தில் பதிவு செய்த கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்ற இரு கட்சிகள் மட்டும் 2-ஆவது சுற்று தேர்தலை எதிர்கொள்கின்றன.

இந்த அடிப்படையில் பூடானில் முதல் கட்ட தேர்தல் கடந்த 17-ந் தேதி நடைபெற்று முடிவடைந்தது. இதில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தோல்வியைத் தழுவியது. டிஎன்டி மற்றும் டிபிடி ஆகிய கட்சிகள் முதல் 2 இடங்களைப் பெற்றன.

டிஎன்டி கட்சியின் தலைவரான லோடாய் ஷெரிங், ஒரு மருத்துவர். மக்களுக்கு சிறந்த சுகாதார திட்டங்களை அளிப்போம் என வாக்குறுதி அளித்து புகழ்பெற்றவர். தற்போதைய பூடான் தேசிய சட்டசபையில் அக்கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனால் தற்போதைய முதல் கட்ட தேர்தலில் 16 தொகுதிகளில் டிஎன்டி வெற்றி பெற்றுள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி 2ஆவது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

பூடானில் நடைபெற்று வரும் தேர்தலை இந்தியாவும் சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பூடானில் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும் மன்னராட்சிக்கு இன்னமும் மரியாதை உண்டு. இது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றுதான். ஆனால் நேபாளத்தைப் போல சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டு வேடிக்கை பார்க்காமல் வெல்லப் போகும் கட்சிகளுடன் இப்போதே இந்தியா நல்லுறவை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் இந்த இரு கட்சிகளில் ஒன்றுதான் நிச்சயம் ஆட்சி அமைக்க இருக்கிறது.

பூடான் நிச்சயம் சீனா சார்புடையதாக மாறிவிடாது என்பது பெருநம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் பெருமளவு கடன் கொடுத்து பெரு நிறுவனங்களை அமைத்து வளைத்துப் போட்ட வித்தை பூடானில் செல்லாது. ஏனெனில் பூடான் மக்கள் இத்தகைய தொழில் வளர்ச்சியை விரும்பவில்லை.

இதற்கு உதாரணமாக அண்மையில் இந்தியா முன்மொழிந்த பூடான் -வங்கதேசம்-இந்தியா- நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தத்துக்கு பூடான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் இத்திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கும், தொழில் நிறுவனங்கள் அமையலாம் என்பது போன்ற காரணங்களை முன்வைத்தது. அதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தற்போதைய உலகமயமாக்கலில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தொழில் வேலை வாய்ப்புகளை தேடுவதில் முனைப்பாக உள்ளனர். அவர்களது தேவைகளை நிறைவு செய்வதற்கான திட்டங்களை இந்தியா முன்னெடுக்கப் போகிறதா? சீனா முன்னெடுக்கப் போகிறதா? என்பதும் முக்கியமான ஒன்றாகும்.

இந்தியாவுக்கு ஏற்கனவே பூடான் மின்சாரத்தை விற்பனை செய்து வருகிறது. இது அந்நாட்டுக்கான மிகப் பெரும் அன்னிய வருவாய். இந்தியாவில் இருந்து சென்ற வஜ்ராயன புத்த மதத்தைத்தான் பூடான் மக்கள் பின்பற்றுகின்றனர். இருநாடுகளிடையேயான உறவு என்பது பன்னெடுங்காலமான ஒன்றுதான்.

ஆனால் எல்லையில் காத்திருக்கும் 'டிராகன்’ சீனா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் பூடானில் நடைபெறும் தேர்தல் முடிவுகளும் அதன் பிந்தைய நிகழ்வுகளும் இந்தியாவுக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும்.

மதி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.