இளைய தலைமுறைகளது கைகளில் - சமுதாய பணிகளை கொடுப்போம்!

இளைய தலைமுறைகளது கைகளில் - சமுதாய பணிகளை கொடுப்போம். ஊக்குவிப்போம் உதவி நிற்போம். நமது சமூகத்தின் பிரதிநிதிகளாக இனிவரும் காலங்களில் தகுதியானவர்களை இனங்கண்டு கொள்வோம்.
Scarborough Rouge-Park TDSP கல்விச்சபை அறங்காவலராக போட்டியிடும் அனு சிறீஸ்கந்தராஜா!

ஸ்கார்பரோ - ரூஜ் பார்க் (Scarborough Rouge-Park) வாழ்மக்களுக்கு,

ரொறன்ரோ மாவட்ட கல்விச்சபை அறங்காவலராக (Toronto District School Board Trustee), ஸ்கார்பரோ - ரூஜ் பார்க் வட்டாரத்தில் போட்டியிடும் என்னை உங்களுக்கு அறிமுகம் செய்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். அனு சிறீஸ்கந்தராஜா ஆகிய நான், ஸ்கார்பரோவில் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்ற என் கணவருடன் ஸ்கார்பரோவிலேயே வசித்துவருகின்றேன். தற்சமயம்,

யோர்க் பல்கலைக்கழகத்தில் சிறுவர், இளையோர் கற்கை விதானத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி வருகின்ற நான், ரொறன்ரோ பல்கலைக்கழக சென். ஜோர்ஜ் வளாகத்தில் அரசியல், குற்றவியல்துறையில் இளமாணிப் பட்டப்படிப்பை நிறைவுசெய்து, வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறையில் கலாநிதி (முனைவர்) பட்டத்தைப் பெற்றேன். யோர்க் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பயிற்சி பெற்றுவரும் எதிர்கால ஆசிரியர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராகப் பணியாற்றுவதில் மனநிறைவு கொள்கின்றேன்.

கடந்த காலத்தில் ரொறன்ரோ மாவட்ட கல்விச்சபையில் ஆராய்ச்சி ஆலோசகராகக் கடமையாற்றியபோது, ரொறன்ரோ கல்விச்சபைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட, ‘புதுப்பிக்கப்பட்ட கணித உத்திகளும் மாணவர் சாதனைகளும்’ என்கின்ற ஆய்வறிக்கைக்கும் கணிசமான பங்களிப்பை நல்கினேன்.

நான் கல்விச்சபை அறங்காவலராகத் தெரிவுசெய்யப்படுமிடத்து என் செயற்பாடுகள் எவ்வாறு அமையும்?
வேகமாக மாறிவரும் இன்றைய தொழில்சார் துறைகளுக்கு ஏற்றவகையில் மாணவர்களைத் தயார்ப்படுத்தவேண்டிய அவசியம் கல்விச்சபைகளுக்கு உள்ளது. இதுசார்ந்து நான் ஆராய்ந்தவகையில், STEAM உடன் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம்) ஒருங்கிணைத்து வகுப்பறைகளை மேலும் நிலைப்படுத்தவேண்டும். இன்றைய மாற்றங்களுக்கு ஏற்றவகையில், நாங்கள் பாடத்திட்டங்களை அமைத்து, அதன் மேம்பாட்டுக்குத் தேவையான வளங்களைப் பயன்படுத்தவேண்டும். இதன் முக்கிய பகுதியாக எங்கள் ஆசிரியர்களை தொழில்சார் வல்லுநர்களாக வளப்படுத்தவேண்டும்.

சிறந்த குடிமக்களே சிறப்பான சமூகத்தை உருவாக்குகின்றார்கள்!

சிறந்த குடிமக்களை உருவாக்கவேண்டிய பொறுப்பு பாடசாலைகளுக்கு உண்டு. முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் இக்கால மாணவர்களுக்குப் பல்வேறுபட்ட அழுத்தங்கள் உண்டு என்பதை நாங்கள் அறிந்துகொள்ளவேண்டும். இக்கால மாற்றங்களுக்கு ஏற்றவகையில், பாடசாலைகளின் தேவைகளை வளப்படுத்தவேண்டும்.

மாணவர்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, சமூகரீதியாக வெற்றியடைய அனைத்து வகையிலும் செயலாற்றவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முழுமையாக அறிந்து, அதற்காகக் குரல்கொடுக்கவும் உழைக்கவும் நான் தயாராக உள்ளேன்.

எங்கள் பாடசாலைகளும் பாடவிதானங்களும் எங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கவேண்டியவை. சமூகத்தின் மையமாக விளங்குபவை பாடசாலைகளே! பாடசாலைகள் சமூக முன்னேற்றங்களில், சமூகச் செயற்பாடுகளில் முக்கியமான பங்களிப்பை நல்குகின்றன.

ரொறன்ரோ மாவட்ட கல்விச்சபை அறங்காவலராக உங்களைப் பிரதிநிதித்துவம் செய்து கடமையாற்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
வருகின்ற ஒக்டோபர் 22 அன்று அனு சிறீஸ்கந்தராஜா ஆகிய எனக்கு வாக்களியுங்கள்.
நன்றி!

#Scarborough Rouge   #tamilnews  #Rouge-Park

No comments

Powered by Blogger.