ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் ஜேர்மனி!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கான உரிமை ஜேர்மனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுவிஸ்லாந்தின் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போதே, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் தலைவர் அலெக்ஸாண்டர் செபரின், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான உரிமையை வழங்குவதற்கான வாக்கெடுப்பில், 12 ஆதரவு வாக்குகளை ஜேர்மனி பெற்றிருந்ததுடன், நான்கு வாக்குகள் துருக்கிக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதன்படி, 2024ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கான உரிமை ஜேர்மனிக்கு வழங்கப்பட்டது.

இதற்கமைய, இப்போட்டிகளை பெர்லின், முனிச், ஹம்பர்க் உள்ளிட்ட ஜேர்மனியின் பத்து நகரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2024ஆம் ஆண்டின் ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கான உரிமை ஜேர்மனிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போட்டித் தொடரை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கும் அவர் சபதம் எடுத்துள்ளார். மேலும், போட்டித் தொடரை சிறப்பாக நடத்துவது மாத்திரமின்றி, அதில் ஜேர்மன் அணி சாதிப்பது தொடர்பாகவும் பெரும் எதிர்பார்ப்புடன் விளங்குவதாக அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், ஜேர்மனி அணி ஆரம்ப சுற்றிலேயே படுதோல்வி தொடரிலிருந்து வெளியேறியது. இதன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக 1988ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரை, ஜேர்மனி நடத்தியிருந்தது. தற்போது ஜேர்மனிக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கடந்த 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடரை, ஜேர்மனி சிறப்பாக நடத்தியிருந்தது.

ஜேர்மனி அணி, இதுவரை 4 முறை உலகக்கிண்ணத்தையும், 3 மூன்று முறை ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரையும் வென்றுள்ளது. கடந்த ஆண்டு போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் போட்டிகள், 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நகரங்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் நடத்தப்படும் உலகக்கிண்ண தொடருக்கான நிகரான, ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

வலுவான மற்றும் பிரபல கால்பந்து அணிகளை கொண்ட பெரும்பாலான அணிகள், ஐரோப்பியாவிலேயே உள்ளதால் இத்தொடர், மிகவும் சிறப்பு வாய்ந்த தொடராக பார்க்கப்படுகின்றது.

இந்த தொடரில், வீரர்கள் கிண்ணத்தை கையில் ஏந்துவது எவ்வளவு கௌரவம் என எண்ணுகிறார்களோ, அதே அளவு அந்த வெற்றியை கொண்டாட இரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.