அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டம்:
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்
கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் உடனடியாகக் கரிசனை செலுத்த வேண்டும். சரியான பதில்கள் கிடைக்காவிடில், அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் உண்ணாவிரதமிருக்கும் குடும்பங்களின் வேண்டுகோளுக்கமைய நாங்கள் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டங்களை நடாத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் உடனடியாகக் கரிசனை செலுத்த வேண்டும். சரியான பதில்கள் கிடைக்காவிடில், அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் உண்ணாவிரதமிருக்கும் குடும்பங்களின் வேண்டுகோளுக்கமைய நாங்கள் மாகாணம் தழுவிய ரீதியில் போராட்டங்களை நடாத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை(17-09-2018) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர். இதன் போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகள் அனைவரது மீதும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கடுமையான சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்ட தரப்பு அவர்களை சித்திரவதை செய்து அவர்களை ஒப்புக்குக் கொள்ள வைத்து உண்மைக்குப் புறம்பான பொய்ய்யான வாக்கு மூலங்களை பெற்றுள்ளன.
குற்றங்கள் எதுவும் செய்யாத அவர்களுக்கெதிராக சாட்சியங்கள் எதுவுமில்லை. இதனால், அவர்களுக்குச் சாட்சியங்களை முன்னிலைப்படுத்த முடியாத சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் வழக்குகளைத் தொடர்ந்தும் நடாத்தினால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற
சூழல் ஏற்படுமென்ற காரணத்தினால் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளுக்கான தவணைகளை போட்டு காலத்தை இழுத்தடித்து வருகின்றது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான் அரசியல் கைதிகளே தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே வவுனியா நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் திடீரென அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்ட காரணத்தினால் அவர்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தார்கள். போராட்டத்தின் பலனாக கடந்த
ஏப்ரல் மாதம்-03 ஆம் திகதி அவர்களுடைய வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்குகளே இவ்வாறு மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்ட பின்னர் கடந்த மேமாதம்- 15 ஆம் திகதி மீண்டும்
வவுனியாவில் வழக்குகள் இடம்பெறும் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் ஆகஸ்ட் மாதம்-08 ஆம் திகதி வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படுமெனத் தவணையிடப்பட்டது. ஆனால், அவ்வாறு கூறப்பட்ட திகதிக்கு முன்னதாக கடந்த யூலை மாதம்-12 ஆம் திகதி சட்டமா
அதிபர் திணைக்களம் தாமாகவே நீதிமன்றத்தைக் கோரி கைதிகளுக்குத் தெரியாமலேயே அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அவர்களுடைய வழக்குகள் எதிர்வரும் டிசம்பர் மாதம்-22 ஆம் திகதிக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
இந்த மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெறுமாகவிருந்தால் சாட்சியங்கள் எதுவுமில்லாத நிலையில் அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில் அவர்களுடைய விடுதலையைத்
திட்டமிட்டுத் தடுக்க வேண்டுமென்ற நோக்கில் பொய்ச் சாட்சிகள் யாரையாவது தேடிப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தலாம் அல்லது வழக்குகளை நடத்தாமல் நீண்டகாலத்திற்கு அவர்களைச் சிறைகளுக்குள் வைத்துச் சாகடிக்கலாம் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிடுகிறதா? எனச் சந்தேகிக்க
வேண்டியுள்ளது. இதன் மூலம் அவர்கள் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்றார்கள் என்ற விடயம் புலனாகியுள்ளது.
இந்தநிலையில் தான் தங்களுடைய வழக்குகள் இடம்பெறாமல் இழுத்தடிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் குறிப்பிட்ட மூன்று அரசியல் கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளினது
கோரிக்கைகள் நியாயபூர்வமானது.
ஏற்கனவே ஐ. நா. உரிமைகள் பேரவை இலங்கையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஒரு மோசமான சட்டம் என்பதால் அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டுமெனக் கூறியிருக்கின்றது. இந்தச் சட்டத்தின் கீழ் தான் அரசியல் கைதிகளான இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அந்தச் சட்டத்தின்
அடிப்படையில் தான் இவர்கள் அனைவரும் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுச் செய்யாத குற்றங்களைச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
எனவே, குற்றங்கள் எதுவும் செய்யாத அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடாகக் காணப்படுகின்றது. எனவே, நாங்கள் அரசியல் கைதிகளுக்கு எங்களுடைய பூரண ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உரிமைக்கான போராட்டத்தில் ஜனநாயக ரீதியாகச் செயற்பட்டமைக்காகவும் தமிழர்கள் பழிவாங்கப்பாட்டுள்ளனர். அரசியல் கைதிகளின் பிரச்சினை அவர்களது தனிப்பட்ட பிரச்சினையோ அல்லது அவர்களது குடும்பங்களுடைய பிரச்சினைகளோ அல்ல. அரசாங்கத்தின் இவ்வாறான அநீதிகளுக்கெதிராக குரல்
கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்துக்குமிருக்கிறது. எனவே, அரசியல் கைதிகளினது விடுதலைக்காக ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் குரல் கொடுக்க வேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில் வேண்டுகின்றோம்.
தொடர்ந்தும் அவர்கள் உண்ணாவிரதமிருக்கும் போது அவர்களது உள்ளுறுப்புக்கள் அனைத்தும் பாதிப்படைந்து உயிரழிவைச் சந்திக்கக் கூடிய அச்சுறுத்தலான நிலையும் காணப்படுகின்றது.
எனவே, யாழ்ப்பாணம் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்கள், தொழிற்சங்கங்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்புக்கள், மீனவர் சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டத்திற்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு வலுச் சேர்க்கும் வகையில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை