முழுவீச்சில் உருப்பெறும் கலைஞரின் சிலை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும்
கலைஞரின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 8அடி வெண்கலச் சிலை, தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமைக் கழகத்தில் அமைக்கப்படவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்டமாக மாதிரி சிலையை தீனதயாளன் வடிவமைத்துள்ளார். இதனை, இன்று (செப்டம்பர் 11) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சிரித்த முகத்துடன், ஒரு கையை உயர்த்தி காட்டும் விதமாகக் கலைஞரின் மாதிரி சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்வையிட்ட ஸ்டாலின், முகத்தில் மட்டும் சில மாறுதல்கள் செய்யுமாறு சிற்பியிடம் கூறியிருக்கிறார்.
இந்த வெண்கல சிலை கலைஞர் மறைந்த நூறாவது நாளில் தலைமைக் கழகத்தில் அமைக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலைஞரின் சிலையை வடிவமைக்கும் சிற்பி ஏற்கனவே அண்ணா சிலை, காமராஜர் சிலை, கண்ணகி சிலை, என பல்வேறு சிலைகளைத் தத்ரூபமாக வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று “முரசொலி மாறன் - கலைஞரின் மனசாட்சி” என்ற நூலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் நூலை ஸ்டாலின் வெளியிட தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.