குக்கின் கடைசி சதம்!

ஜடேஜா வீசிய 70ஆவது ஓவரின் முதல் பந்தில் ஓவர் த்ரோவின் உதவியோடு அலெஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 33ஆவது மற்றும் கடைசி
சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 332 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ஜடேஜா (86), ஹனுமா விஹாரி (56) ஆகியோரின் உதவியுடன் 292 ரன்கள் சேர்த்தது. 40 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அலெஸ்டர் குக் அரைசதம் கடந்தார். மறுமுனையில் கேப்டன் ஜோ ரூட் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்தார். ரூட் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் பந்துவீச்சில் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பினை ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானே கோட்டை விட்டார். இதனை பயன்படுத்திகொண்ட ரூட், அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து அசத்தினார்.
மறுமுனையில் குக், அவரது கடைசி டெஸ்ட் என்பதால் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இந்த ஜோடியை அவர்களால் பிரிக்க முடியவில்லை. உணவு இடைவேளைக்கு முன் குக் அவரது 33ஆவது மற்றும் கடைசி சதத்தை கடந்து புன்னகையுடன் பேட்டை உயர்த்திக் காட்டினார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்துநின்று அவரை உற்சாகப்படுத்தினர். உணவு இடைவேளைக்குபின் மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ஜோ ரூட்டும் 14ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
தற்போது இங்கிலாந்து 84 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. குக் 132 ரன்களுடனும், ரூட் 108 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து இந்தியாவை விட 329 ரன்கள் முன்நிலையில் உள்ளது. எஞ்சிய ஆட்டத்தில் இங்கிலாந்து விரைவில் 400+ ரன்களை கடந்து டிக்ளேர் செய்யவே முயற்சிக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.