தற்கொலைகளைத் தடுக்கலாம் வாருங்கள்!

உலக சுகாதார மையம் மற்றும் சர்வதேசத் தற்கொலைத் தடுப்பு சங்கம் இணைந்து விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி தற்கொலைத் தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று (செப்டம்பர் 10) காலை சென்னை அடையார் மைண்ட் ஸோன் மருத்துவமனையில் தற்கொலைத் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் சுனில்குமார், உளவியல் நிபுணர் டாக்டர் ஜெயசுதா காமராஜ் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.
மனச்சோர்வு, மது மற்றும் போதைப்பழக்கம் கொண்டவர்கள், கடுமையான மற்றும் உணர்வுரீதியான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தற்கொலை ஆபத்துடையவர்களாகக் கருதப்படுவர். நேசித்தவர்களை இழந்து வாடுபவர்கள், உறவுகள் இடையே விரிசல் ஏற்பட்டதால் பாதிப்புற்றவர்கள், சமூக ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வன்முறை, வன்கொடுமையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் என்று பலருக்கு மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ’மைண்ட் ஸோன் மருத்துவமனையில் சிகிசையளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் எவ்வளவு நபர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்தது? தற்கொலைக்கு முயற்சித்துத் தப்பித்தவர்கள், அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதுபோன்ற அனைத்து விஷயங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. “தற்கொலையில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று, அந்த நொடியில் முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்வது. இன்னொன்று, நீண்ட நாட்கள் தற்கொலை எண்ணங்களை மனதில் நினைப்பது. இதுபோன்ற எண்ணங்கள் பெருவாரியான மக்களுக்குத் தோன்றாமல் இருக்காது. அதை முன்னெடுக்காமல் தவிர்ப்பது எப்படி” என்று இந்த நிகழ்வில் ஆலோசனைகள் கூறப்பட்டது. இதுகுறித்து, தங்களது மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் அனுபவங்களைச் சிலர் பகிர்ந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.