நாகர்கோவிலில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா!

நாகர்கோவிலில் நாளை எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையிலும், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு, இதுவரை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நாளை 22–ந் தேதி (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் மாலை 3 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் விழாப் பேருரையாற்ற உள்ளார்.

இவ்விழாவிற்கு, சட்டபேரவைத் தலைவர் ப. தனபால் தலைமை வகிக்கவுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார். மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி (புதுடெல்லி) என்.தளவாய் சுந்தரம் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

புகைப்பட கண்காட்சி

இவ்விழாவையொட்டி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத்தொண்டு, சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றி பொதுமக்கள் பார்வையிடும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பல்வேறு அரிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்படவுள்ளது.

இவ்விழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத்தலைவர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றவுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நன்றியுரையாற்றவுள்ளார். 

No comments

Powered by Blogger.