சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தைக் கல்வி நிலையங்களில் கொண்டாட வேண்டும் என யூ.ஜி.சி. சுற்றறிக்கை அனுப்பியிருந்தது சர்ச்சையை
ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவத்தினர் அதிரடியாக நுழைந்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினர். இதில், பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல், லிபா உள்ளிட்ட 7 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வரும் 29ஆம் தேதியோடு தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இந்நிலையில் இதனை சிறப்பாக கொண்டாடும்படி அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி) அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பழிப்பு நடவடிக்கையை அறிவித்தது. இதனால் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாளை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதேபோல், பண மதிப்பழிப்பு நாளை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாடப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு தைரியம் உண்டா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். தங்கள் மாநிலத்தில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினத்தை கொண்டாட மாட்டோம் என மேற்கு வங்க கல்வியமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்.
இந்நிலையில், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தின கொண்டாட்டம் என்பது அரசியல் திணிப்பு அல்ல, தேசப்பற்று என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (செப்டம்பர் 21) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரைதான் வழங்கப்பட்டுள்ளது, இதில் எங்கே இருக்கிறது அரசியல்? இது அரசியல் அல்ல தேசப்பற்று. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்தும், ராணுவ வீரர்கள் எவ்வாறு களப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை. விரும்புபவர்கள் முன்னாள் ராணுவ வீரர்களை அழைத்துவந்து கலந்துரையாடல் நடத்தலாம்” என்று விளக்கமளித்துள்ளார்

No comments

Powered by Blogger.