மதுரை சிறையில் சோதனை!

புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், இன்று (செப்டம்பர் 23) காலை மதுரை மத்தியச் சிறையில் டிஐஜி பழனி தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவித்தது பற்றிய புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகின. கைதிகள் சிறை வளாகத்தில் புகைப்படங்கள் எடுத்ததும் சர்ச்சைக்குள்ளானது. இது பொதுவெளியில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கைதிகளின் அறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் டிவிகள், எஃப்.எம்.ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தண்டனைக் கைதிகள் சிறையில் இருந்தவாறே வெளிநாடுகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியன்று, புழல் சிறையில் சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா மற்றும் டிஐஜி கனகராஜ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் ஒரு மாதத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது எனவும், பணம் வாங்கிக்கொண்டு செல்போன் முதலான வசதிகளைச் செய்துதந்த சிறை ஊழியர்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார் அசுதோஷ் சுக்லா. இதன் தொடர்ச்சியாக, புழல் சிறையில் இருந்த அதிகாரிகள் சிலர், தமிழகத்தின் வேறு சில சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
புழல் சிறையைத் தொடர்ந்து சேலம், கடலூர், பாளையங்கோட்டை மற்றும் கோவை மத்தியச் சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இன்று காலையில் மதுரை மத்தியச் சிறையில் டிஐஜி பழனி தலைமையில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரு காவல் உதவி ஆணையர், 2 ஆய்வாளர்கள் உட்படச் சுமார் 150 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், குட்கா, பீடி, சிகரெட் போன்றவை இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.