விஜய்க்கு வாழ்த்து சொன்ன விஜயகாந்த்

‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்ததற்காக 2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக 2014ஆம் ஆண்டு முதல் விருதுகளை வழங்கி வருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் ‘மெர்சல்’ திரைப்படத்தில் நடித்தற்காக விஜய் ‘ஏஜென்ட்’ திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, ‘சைட் சிக் கேங்’ நடிகர் அட்ஜெட்டே அனாங், ‘எல் ஹெபா எல் அவ்டா’ நடிகர் ஹசன், ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் லெஸ்ஸர் காட்’ நடிகர் ஜோஷுவா ஜாக்சன் மற்றும் ‘தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல்’ பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்காக இணையத்தில் வாக்குப் பதிவும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று லண்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது படமான மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு தரப்பினர் விஜய்க்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜயகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார், “சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக 'சிறந்த சர்வதேச நடிகர்' என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பல விருதுகள் பெற்று தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘வெற்றி’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய். அதன் பின் ‘செந்தூரபாண்டி’ என்ற திரைப்படம் மூலம் நாயகனாக விஜயகாந்துடன், விஜய் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.