‘அந்த’ சாதனையையும் விட்டுவைக்காத ‘மெர்சல்’!

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ் ஜே சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துக் கடந்த ஆண்டு வெளியான படம் மெர்சல். அட்லி இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனத்தையே இப்படம் பெற்றிருந்தாலும் வசூலை வாரிக் குவித்திருந்தது.

சமூக வலைதளங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்துவந்த மெர்சல் அவற்றில் சில சாதனைகளையும் நிகழ்த்தியது. குறிப்பாக இப்படத்திற்காக வெளியிடப்பட்ட டீசர்தான் அதிகமான லைக்ஸ்களைக் குவித்த முதல் தமிழ் டீசர் என்னும் பெருமையைப் பெற்றது. அதேபோல இந்த டீசர் வெளியான சமயத்தில் அதிகமான யூ டியூப் பார்வைகளைக் கொண்ட டீசராகவும் மெர்சல் டீசரே இருந்தது.

இப்படத்திற்காகப் பிரத்யேகமான எமோஜியும்கூட வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது மெர்சல். இதுவரை யூ டியூப்பில் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்களின் ஆல்பங்களிலேயே அதிகமான பார்வைகளைக் கடந்த தமிழ் ஆல்பமாகத் தேர்வாகியுள்ளது மெர்சல். இதுவரை சுமார் 350 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைக் கடந்திருக்கிறது இந்த ஆல்பம். இதையொட்டி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை “தமிழின் முதல் வெர்டிகள் வடிவ வீடியோ” (vertical video) எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவை பிரத்யேகமாக யூ டியூப்பில் வெளியிட்டிருக்கிறது சோனி நிறுவனம்.

தனது சாதனைகளைத் தானே அடுத்தடுத்த படங்களின் வாயிலாக முறியடித்துவரும் விஜய், இந்தச் சாதனையையும்கூட தனது அடுத்த படமான சர்காரில் முறியடிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். மெர்சலில் இடம்பெற்ற அதே விஜய்- ஏ.ஆர் ரஹ்மான் கூட்டணி சர்காரிலும் இடம்பெற்றிருப்பது அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாகவும் உள்ளது.
#india #mersal
Powered by Blogger.