முல்லைத்தீவில் பதற்றம்!

முல்லைத்தீவு - செம்மலை நாயாறு பகுதியில் மக்களின் காணிகளில் விகாரை ஒன்றினை அமைத்து நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் இரண்டாவது தடவையாக நில அளவீட்டு பணியினை மேற்கொள்ள வருகைதந்த தொல்பொருள் திணைக்களம் மற்றும் நில அளவீட்டுத் திணைக்களத்தினரை பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.

இன்றைய தினம் குறித்த பகுதியில் அமைந்துள்ள விகாரையை விஸ்தரிக்கும் நோக்குடன் செம்மலை கிராம மக்களின் காணிகள் மற்றும் பொது மயானம் அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் இடம்பெறுவதை மக்கள் அறிந்துள்ளனர்.

இதையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையை சேர்ந்தவர்கள் மற்றும் செம்மலைக்கிராம பொதுமக்கள் அருட்தந்தை தயாகரன் ஆகியோர் தொல்பொருள் திணைக்களம் மற்றும் நிலஅளவை திணைக்கள அதிகாரிகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு உடனடியாக அளவீட்டுப்பணிகளை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

இதற்கு அமைவாக எதிர்ப்பினை தங்க முடியாத திணைக்கள அதிகாரிகள் அளவீட்டு பணிகளை இடைநிறுத்தி விட்டு திரும்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் அளவீட்டு பணிகள் இடம்பெற்ற போது காணி உரிமையாளர்களான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரதாபன் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினை எடுக்கும் வரையில் இந்த பகுதிகளில் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்து சென்றிருந்தார்.

இருந்த போதிலும் பிரதேச செயலாளரின் உத்தரவையும் மீறி பிரதேச செயலகத்தின் அனுமதிகள் எதுவுமின்றி தொல்பொருள் திணைக்களத்தினரும் நில அளவை திணைக்களத்தினரும் இன்றையதினம் அளவீட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்காக பிக்குமார் குழுவொன்று சென்றிருந்த போதும் பொது மக்கள் அவர்களது திட்டத்தை முறியடித்து அவர்களை விரட்டியடித்தார்கள்.

இந்த நிலையில் மீண்டும் இவ்வாறான நில அளவையியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் முல்லைத்தீவு தமது கையை விட்டு சென்று விடுமோ என்ற அச்சமும் பதற்றமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#srilanka    #mullathivu  #tamilnews   #jaffna

No comments

Powered by Blogger.