நாகை அருகே நடுக்கடலில் கடற்கொள்ளையர் அட்டகாசம்!

நாகை அருகே நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் 5 பேரை அரிவாளால் வெட்டினர். நாகை மாவட்டம் விழுந்தமாவடி வடக்கு மீனவ
காலனி தெருவை சேர்ந்தவர் இளம்பரிதி (23). இவருக்கு சொந்தமான  படகில் மீன் பிடிக்க கடந்த 26ம் தேதி விழுந்தமாவடியில் இருந்து  ராஜேந்திரன் (45), மணிமாறன் (32),  காளிதாஸ் (20), சக்திவேல் (20) மற்றும் இளம்பரிதி ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணி  அளவில் விழுந்தமாவடிக்கு தென் கிழக்கே 18 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஒரு படகில் 3 பேர் வந்தனர். அவர்கள் இலங்கை தமிழ் பேசினர். இதில் ஒருவர் துப்பாக்கியும், மற்றொருவர்  அரிவாளும், இன்னொருவர் உருட்டுக்கட்டையும் வைத்திருந்தனர்.

அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியேதாடு 5 மீனவர்களையும் சரமாரியாக தாக்கினர். இதில் ராஜேந்திரனின் வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மணிமாறனுக்கு கை,  தலையில் காயம் ஏற்பட்டது. இளம்பரிதி,  காளிதாஸ் ஆகிய 2 பேரையும் கடலில் தள்ளிவிட்டு  படகில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன், ஐஸ்பாக்ஸ், 2 கைபேசிகள், டீசல், ஜிபிஎஸ் கருவியை  பறித்து கொண்டு சென்றனர். இவர்கள் கடற்கொள்ளையர்களாக  இருக்கலாம் என கூறப்படுகிறது. மற்ற மீனவர்கள் இவர்களை மீட்டு நேற்று அதிகாலை திரும்பினர். பின்னர் அவர்களை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.