காணாமல்போன என் உறவை மீட்டுத்தாருங்கள்!

வாசலில் சைக்கிலின் மணிஒலி கேட்டது.யாராக இருக்கும்என எண்ணியவாறு வாசலை எட்டிப்பார்த்தேன் தபால்காறன் நிற்பது தெரிந்தது.
யார் எனக்கு கடிதம் அனுப்பியிருப்பார்கள் என்று நினைத்தபடி கடிதத்தை பெற்றுக்கொள்ளச்சென்றேன்,

அப்போதுதான் தபால்காறன் துரைராஜ் மோகனதாஸ் யார் நீங்களா....?உங்கள் கணவனா மோகனதாஸ் என்று கேட்டார்,ஓம் என்று சொல்லிவிட்டு கடிதத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன்.

மோகனதாஸ்......? இன்று அந்தபெயர் எனக்கு மட்டுமே சொந்தமாகி விட்டபெயர்,எப்படி வந்தது எனக்கு இவ்வளவு துணிவும் தைரியமும்.அவன் என் கணவன்தான் என்று கூறுகிறேனே...,?அவன் என் கணவனா...?
என் உயிர்காத்து நின்றவன்,நான் இன்று உயிரோடு இருக்க காரணமானவன்......

இறுதியுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில்.நான் களமுனையில் நின்றேன். இருட்டுமடு பகுதியில் இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலில் வயிற்றுப்பகுதியிலும் காலிலும் காயமடைந்திருந்தேன்,வயிற்றுக்காயம்பெரிய காயமாக இருந்தபடியால் என்னால் எழுந்து நடக்கக்கூட முடியாத சூழலில் இருந்தேன்.

என் சகதோழிகளே என்னை தாயிற்கு நிகராக இருந்து என்னை அன்போடு பார்த்துக்கொண்டார்கள்,இராணுவத்தின் முன்னேறும் நடவடிக்கையின் போது மக்களும் நாளொரு இடமாக இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள் மக்கள்,மக்களைப்போலவே நாமும் எம் இருப்பிடத்தை நகர்த்தியபடி இருந்தோம்.

பல இழப்புக்களோடு இராணுவமும் முன்னேறிவந்தபோது வைகாசி மாதம் 17 ஆம் திகதி மக்கள் அதிகாலை வேளையில் இராணுவத்திடம் சரணடைய தொடங்கியிருந்தனர்,பல போராளிகளும் மக்களோடு மக்களாக சென்றுகொண்டிருந்தார்கள்.

எங்கும் தீப்பிளம்பும் தோட்டாக்களின் சத்தமும்.எறிகணைகளின் சத்தமுமாக காதுகளை அடைத்தபடி  இருந்தது,பொழுது 3மணி அப்படி இருக்கும்.எங்கள் தோழிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார்கள்,

அவர்கள் காயப்பட்ட எம்மை என்ன செய்வது எப்படி கொண்டுபோவதென்று தெரியாமல் தவித்தார்கள்,அப்போதுதான் நாங்கள் சொன்னோம்,நீங்கள் போங்கோ,கடுமையான சூழலில் இராணுவம் எம்மை பிடித்தால் நாங்கள் குப்பி கடிக்கிறோம் என்றோம்.அவர்கள் எங்கள் தோழிகளாயிற்றே விட்டுப்போக மறுத்தார்கள்,எம்மோடு காயமடைந்தவர்களை விட்டிட்டுபோக மனமின்றி இருந்தார்கள்,இருந்த எல்லோரும் பெரும் காயக்காறரே,

அவர்களிடம் சொன்னோம் எப்படியாவது உங்கள் உயிரை காப்பாத்திக்கொள்ளுங்கள்,இராணுவத்திடம் மக்களோடு மக்களாக சரணடையும்படி கூறினோம்,ஓரளவு நடக்கக்கூடிய காயக்காறரை கூட்டிச்சென்றார்கள்,என்னோடு 4பேர் ஓர் இடத்தில் படுத்திருந்தோம்,

இராணுவம் நெருங்கிவருவதை அருகாமையில் ஒலித்த வேட்டொலிகள் உணர்த்தியது.இனி எதுவும் செய்யமுடியாது என்று நினைத்தபடி இருந்தபோது வந்து சேர்ந்தான் போராளி ஒருவன்.

எம்மிடம் ஓடி வந்தவன் தன் நண்பர்களிற்கும் சில கடமைகளை கூறிவிட்டு என்னை தூக்கி நிமிர்த்துவது புரிந்தது,அண்ணா விடுங்கள் நாங்கள் வரேல என்றபோதும் அவன் கேட்காமம் என்னை கைதாங்கலாக பிடித்து எழுப்பி எங்கிருந்தோ கொண்டுவந்த உடைகளை தந்து மாற்றப்பண்ணி கைதாங்கலாக இராணுவ பகுதிக்குள் கூட்டிவந்தான்,

என் உடல் நிலை காயமடைந்து அவ்வளவு மோசமாக இருந்தது,தலைசுற்று மயக்கம் என்று உடலும் பலவீனமாகி மற்றவர்களை பார்க்க முடியாமல் இருந்தது.பல்லாயிரம் மக்கள் ஒருவழிப்பாதை.எப்படி நடக்க முடியும்..?தள்ளுப்பட்டே சென்றனர் எல்லோரும்,நான் காயத்தின் வேதனையில் உணவு உண்பதில்லை,அது மயக்கத்தை உண்டு பண்ணியது,

அரைமயக்கத்தில் சென்ற நான் முழுமையாக மயக்கமானேன்,கொஞ்சம் நினைவு தெளிந்து எழும்பியபோது அப்போராளி என்னை தூக்கிச்செல்வது தெரிந்தது,

எனக்கு உண்மையில் மனசுக்கு கவலையாகவும் ஒரு நெருடலாகவும் இருந்தது,என்னால் ஓர்போராளி கஸ்ரப்படுவதைபார்க்க வேதனையாக இருந்தது,இராணுவபகுதிக்குள் சென்றுவிட்டோம்,

பிரத்தியேகமாக இராணுவம் கம்பி அடித்து அதற்குள்ளேதான் எல்லோரையும் உள்வாங்கினான்,அதற்குள் பலபோராட்டங்களின் மத்தியில் என்னை கொண்டுவந்து இருத்தினான்,அரைமயக்கம்ஆனாலும்,ஓரளவு உணரமுடிந்தது வெளிச்சூழலை.

ஓர் நாள் முழுவதும் ஓர்துளி தண்ணீர்கூட வாயில்விடவில்லை.பலநாள் சரியான உணவில்லை,எனக்கு காவலனாக அந்தபோராளி  இரவு நேரம்முழுவதும் தூங்காமல் இருப்பது புரிந்தது,

மறுநாளும் அதேநிலைதான்,சரியான தண்ணீர்தாகம் தண்ணீர் கேட்டேன்,அப்போதுதான் தண்ணீர் இல்லை சரி பார்க்கிறேன் என்றுவிட்டு அங்குமிங்கும் நடந்து திரிந்தான் எனக்கு தண்ணீர் வாங்கிதரவேண்டும் என்ற எண்ணத்தில்.

எனக்கு இராணுவம் கதைக்கும் குரல் கேட்டபோது பயமாக இருந்தது,என்ன செய்வது என்ற பயந்துகொண்டு நின்றபோதுதான் பயப்பிட வேண்டாம்,உங்களை என் மனைவி என்று சொல்கிறேன்,என் வீட்டுப் பெயர் துரைராஜ் மோகனதாஸ் விலாசம் மட்டுவில் தெற்கு கனகம்புளியடி.என்று சொன்னான்,

எனக்கு இப்படி ஒரு  உறவுமுறையோடு போவது விருப்பமில்லை,மறுத்தவிட்டேன்,இனி எதுவும் செய்யேலாது.வெளியில் போகும்வரை கணவன் மனைவியாக பதிவை மட்டும் கொடுப்போம்,எனக்கு பிரச்சனை இல்லை,உங்கட நலனுக்காகத்தான் சொல்கிறேன் என்றான்,

கூட்டிக்கொண்டு வந்திட்டன்,கடைசிவரை இனி வெளிய போகும்வரை நான்தான் பொறுப்பு.அதனால என் பெயரை பாடமாக்குங்கள் என்றான்,எனக்கு நினைவில் நிற்கவில்லை.பலதடவை மீண்டும் மீண்டும் சொல்லி நினைவில் வைத்திருக்கும்படி கூறினான்,என் பெயர் விலாசத்தை கேட்டுத்தெரிந்து கொண்டான்,

தான் தண்ணீர் எடுத்துவருவதாகவும் தான் வரும்வரை அந்த இடத்திலேயே என்னை கவனமாக இருக்கும்படியும் கூறிவிட்டு இராணுவம் வாகனத்தில் கொண்டுவந்து தண்ணீர் கொடுத்த இடத்திற்கு சென்றான்,காலையில் 11.00மணியளவில் சென்றவன் வரவேயில்லை.தண்ணீரோடு வருவான் என்று காத்திருந்தேன்,மாலை 3.00 மணிவரை,

அதன்பின்புதான் அருகில் இருந்தவர்கள் கதைப்பது கேட்டது,பலரை இராணுவம் பிடித்து வாகனங்களில் ஏற்றிசென்றதாகவும் கதைத்தார்கள்.மோகனதாசும் அதற்குள் ஒருவன் என்று உணர்ந்துகொண்டேன்,

எனக்கு தண்ணீர் எடுக்கச்சென்றவனை இராணுவம் பிடித்துவிட்டது,நானே அவனது காணாமல்போனதற்கு  காரணகர்த்தா என்று ஏங்கதொடங்கினேன்,அன்று தொடங்கிய ஏக்கம் இன்றுவரை தொடர்கதையாகவே இருக்கின்றது,

வேறு சிலரின் உதவியோடு புனர்வாழ்வு முகாம் சென்றேன்,அங்குவைத்து மோகனதாசின் அம்மா அப்பாவிற்கு கடிதம் அனுப்பினேன்,என்னை பார்க்க வந்தவர்கள்,என்னை மருமகளாகவே உரிமை கொண்டாடினார்கள்,தங்கள் மகனைப்பற்றி பெருமையாக கூறினார்கள்.எப்போது திருமணம் செய்தது என்றெல்லாம் கேட்டார்கள்,

எப்படி என்னால் கூறமுடியும் இரண்டு
நாள்தான் எனக்கும் அவனுக்குமான பழக்கம் என்று...?அவன் என்னை பாதுகாப்பாக கூட்டிவந்தவன் மட்டும்தான் என்பதை எப்படி கூறுவது..?எல்லாவாற்றையும் மறைத்துவிட்டேன் பயத்தில். அவர்கள் மகன் காணாமல்போக நான் காரணம் என்று அவர்கள் நினைத்துவிட்டால்..? ,மோகனதாசின் பெற்றோர் சகோதரர்கள் என்னை யாழ்ப்பாணத்தில் இருந்துவந்து பார்த்துவிட்டுசெல்வார்கள்,

நான் விடுதலையாகிவந்தபோதும் அவன் பெற்றோர்கள்  நான் இருந்தால் மகனின் இழப்பு தெரியாது என்று எண்ணி என்னை தங்களோடு வந்து இருக்கும்படி கூறி அழைத்தும் சென்றுவிட்டார்கள்,

என்னை பெத்த பிள்ளையாக பார்க்கிறார்கள்,அன்பு செலுத்துகிறார்கள்,அவன் அம்மா அப்பா மருமகள் என்று என்னை வாய்நிறைய அழைக்கிறார்கள்,சகோதரியும் சகோதரனும் அண்ணி என்று அன்போடு அழைப்பார்கள்,

என்னால் அதன்பின்பு எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை,அவன் பெயரோடே குடும்ப அட்டை பதிந்தேன்,எங்கெல்லாம் காணாமல்போனோரிற்கான ஒன்றுகூடல்களோ ஆர்ப்பாட்டங்களோ நடந்தாலும் அங்கு நிற்பேன் முதலாவதாக,சுழற்சிமுறை காணாமல்போனோர்களிற்கான ஒன்றுகூடும் கொட்டிலுக்குள் எத்தனைநாள் றோட்டோர வாகனசத்தத்தோட தூங்காமல் முழிச்சிருந்திருப்பன்,

இன்று திருமதி மோகனதாஸாகவே மாறிப்போனன்.என் பெற்றோர் என்னை மறுமணம் செய்யும்படி வற்புறுத்துகிறார்கள்,தனிமையில் வாழமுடியாது உனக்கொரு துணைதேவை வேளைக்கு கல்யாணத்தைக்கட்டு என கூறுகிறார்கள்,

திருமணமாகாத என்னை மறுமணம் செய்யும்படி கூறுகிறார்கள்,.?என்ன செய்யமுடியும் என்னால்..?நான் திருமணம் ஆகாதவள் என்பது என்தோழிகளிற்கே தெரியும்,அவன் போராளி,என் உயிரைகாத்தவன்,எனக்காக தண்ணீர் எடுக்கபோய் காணாமல்போனான்,

அவன் பெற்றோர்கள் என்னை கூப்பிட்டு கதைத்தார்கள்.வேறுதிருமணம் செய்யசொல்லி ஆக்கினை படுத்தினார்கள்,தங்களை அப்பா அம்மா என்று அழைப்பது உண்மையாக இருந்தால் வேறு திருமணம் செய்யவேண்டும் என்றார்கள்,

தங்கள் மகனிற்காக இன்னொரு பிள்ளையின் வாழ்வை அநியாயம் ஆக்கலாமா என்று ஒரே கேட்பார்கள்.9 வருடம் காத்திருந்துவிட்டேனே அவனிற்காக இனி என் முடிவை எப்படிமாற்றுவது அவன் வந்துவிட்டால்..?

கடிதத்தை பிரித்து படித்தேன்,வாறமாதம் 08 ஆம் திகதி காணாமல் போனோரிற்கான ஆர்ப்பாட்டம் வவுனியாவில் நடக்க இருப்பதால் அதில் கலந்துகொள்ளுமாறு இருந்தது,
இரண்டுநாள் எனக்கு துணையாக இருந்தவனிற்காக 9 வருடங்கள் காத்திருக்கிறேன்,

அவன் எனக்கு கணவனும் இல்லை,காதலனும் இல்லை,சகோதரனும் இல்லை,அதற்கு மேலான உறவாக உள்ளான்.

அன்பார்ந்த எம் மக்களே என்னைப்போல் எத்தனையோபேர்,உறவுகளை தொலைத்த வருடக்கணக்கான தேடல்களோடு உண்ணாமல் உறங்காமல் அலைந்துதிரிந்து கொண்டிருக்கிறோம்,என் மோகனதாஸ் வரவேண்டும்.எனக்காக சிறை சென்றவன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் தினம் தினம் ஏங்கியபடி கண்ணீரோடு நாட்களை கடத்துகிறேன்.

எமக்காக எம் காணாமல் போனஉறவுகளிற்காக ஒருமித்து குரல்கொடுத்து எம் உறவகளை மீட்டுத்தாருங்கள்,நானும் இன்று 9வருட காத்திருப்பில் வாழஆசைப்படுகிறேன்,என் வாழ்வில் ஒளிஏற்றிவிடுங்கள்,உங்கள் குடும்பங்களில் ஒருவரிற்கு நடந்த அநீதி என்று நினைத்து எம்மோடு கைகோர்த்து எம் உறவுகளிற்கு ஆதரவாக குரல்கொடுத்து ஒரு நல்ல முடிவைப்பெற்றுத்தாருங்கள்,

நாங்கள் உங்கள் சந்தோசங்களிற்காக போராடபோனோம்,இன்று நீங்கள் எங்கள் சந்தோசங்களிற்காக எம் உறவுகள் விடுதலைக்காக குரல்கொடுங்கள்,எம்மை சமூகத்தோடு இணைந்து வாழவையுங்கள், எம்மவர்களை கொடுமையான சிறைவாழ்வில் இருந்து மீட்டுத்தாருங்கள்,

(உண்மையின் தழுவல்கள்)

**பிரபாஅன்பு**

No comments

Powered by Blogger.