உனக்குள் உறைந்து போனேன்!

அடர் யாமத்தின் சுவடுகளுக்குள் விழுந்து மாண்டுபோன  சூரியத்துண்டம் நான்.

மேவியிறங்கும் மேக ஓட்டங்களுக்குள்
மௌனித்துப் புதைந்துபோன சில மழைத்துளிகளின்
விம்மல்களைப் போன்றே என் கண்ணீர்த்தடயங்களும் யாருக்கும் தெரிவதில்லை.

விண்மீன்களைப் பிடித்து
இறக்கைகள் அமைத்து பறந்துகொண்டிருப்பதாய்
கற்பனை செய்தே கடக்க எத்தனித்த 
சில தருணங்கள்
எதிர்பாராது வந்த விண்கலத்துடன் மோதுண்டு வெடித்து
மலைச்சாரல்களுக்குள் மாண்டுபோயிருப்பதைப் போன்றதே உனக்குள்ளான என் உறைவும்.

பனிமூட்டங்களுக்குள் ஊடறுத்து பாயும் ஆதவனின் ஔிக்கச்சையை
கட்டியணைத்து முத்தமிடும் நொடிநேர பனிமூட்டத்தின் நகைப்புப்பேன்றதே...
யாரும் குறைகூற முடியா என்
வெளிச்சத்தில் மட்டுமான புன்னகைகளும்...

எதிர்பார்ப்புகளின் விழி மொழிகள்
ஏக்கங்களின் தொனிகளைப் பிரசவிப்பினும்
உன்னுள் நான் உறைந்தே வாழ்வேன்..
தொடமுடியா தொலைவிலிருந்தே விண்ணும் மண்ணும்
பேசிக்கொள்வதைப் போல.

***தமிழ் நதி ***

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.