மது போதையில் கருத்துச் சுதந்திரத்தை பலியெடுக்க துடிக்கிறது கிளிநொச்சி தமிழரசு

எனது எழுத்துப் பயணத்திலும் ஊடகச் செயற்பாட்டிலும் எப்பொழுதும் நீதிக்குப்புறம்பாக, பொய்யான, திட்டமிட்ட அவதூறுகளை ஏற்படுத்துகின்ற வகையில் எழுதியது இல்லை, இனிமேலும் அவ்வாறு எழுதப்போவதுமில்லை, இதுவரை காலமும் நான் எழுதியதில் ஏதாவது ஒன்றை இது பொய்யானது,  அநீதியானது, என்று எவராவது ஆதாரத்துடன் நிரூபத்தால் எனது எழுத்துப் பணியை விட்டுவிடத் தயாராகவுள்ளேன்.

மேலும் கடந்தகாலங்களில் நான் செயற்படும் கிளிநொச்சியை மையமாக  வைத்து பல செய்திகளை எழுதியிருக்கிறேன். குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் முறைகேடுகள், ஜனநாயக மறுப்புக்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் எனப் பலவற்றை அவற்றுக்கான ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கின்றேன்.

அண்மைக்காலத்தில் கரைச்சி பிரதேச சபையின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பலவற்றை உரிய சான்றுகளுடன்  வெளிப்படுத்தினேன். அதிலும் முக்கியமாக சந்தை விவகாரம் தொடக்கம் சபையின் மாதாந்த கூட்டங்களில் இடம்பெறும் முறைகேடுகள் வரை ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தேன். இதனால் சபைக் கூட்டங்களிலும் சபையின் தவிசாளர் தனிப்பட்ட ரீதியில்  என் மீது  அவதூறுகளை மேற்கொண்டுடிருந்ததோடு சபையின் கூட்டங்களில் பங்குகொள்ள ஊடகவியலாளர்களுக்கு தடையை  அல்லது கட்டுப்பாட்டுக்களை  கொண்டுவரப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படிச் செய்வதன் மூலம் தவறுகளை மூடி மறைத்து விடலாம். உலகத்தை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். இது சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்து தொடர்பாடலும் வளர்ச்சியடைந்து மக்களை எளிதில் ஏமாற்ற முடியாத காலம் என்பதை மறந்து விட்டார்கள்.

ஆனால் இதுவரைக்கும் என்னுடைய செய்தியில் ஒன்றைதானும் இவர்களால்  பொய் என்றோ  நீதிக்கு புறம்பானது என்றோ நிரூபிக்க முடியவில்லை.  அத்தோடு நான் தொடர்ச்சியாக வலியுறுத்துவது போன்று சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் செல்லவில்லை

அது மாத்திரமன்றி  கிளிநொச்சியில் விடுதலைப் போராட்டத்தையும் தமிழ்த்தேசியத்தின் பெயரையும் தங்கள் சொந்த நன்மைகளுக்காக உபயோகித்துக் கொண்டிருக்கும்    பலர் தங்களின் போலி முகநூல்கள் மூலம் என் மீது சோறு பூசுவதனையும் அச்சுறுத்துவதனையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்தான்  23-09-2018 அன்று கிளிநொச்சி தமிழரசு கட்சியின் சார்பில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராகச் செயற்பட்ட  பாடசாலை ஆசிரியர் சுகந்தன்  என்பவர் மது போதையில் என்னை வீடு புகுந்து தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தின் போது தமிழரசு கட்சியின்  கிளிநொச்சி நகர வட்டாரத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இன்னொரு ஆசிரியரான லோகேஸ் அருகில் நின்றார். இன்னொரு ஆசிரியரும் சுகந்தனின் வீட்டிலிருந்தார்கள். என்னை  தாக்குவதற்கு ஓடி வந்த சுகந்தனை மறித்து பிடித்துச் சென்றது ஆசிரியர் லோகேஸ்.

 “ நீ எழுதக் கூடாது, எழுதிவிட்டு தொண்டமான்நகரில் எப்படி உயிரோடு இருப்பாய்?  உன்னை அல்லது உனது பிள்ளைகளை பலியெடுப்பேன்..”  என்பது உட்பட மிக மோசமான வார்த்தை பிரயோகங்களும் தூசணங்களுமாக ஆசிரியர் சுகந்தன் என்னை நோக்கி பிரயோகித்தார். இது எனக்கு மட்டுமல்ல என்னுடைய குடும்பத்திலுள்ளவர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. இதைப்போல இதற்கு முன்பும் மது போதையில் வந்து வேலியோரமாக நின்று சத்தம் போடுவார். நேற்று என்னுடைய பிள்ளைகளே எரிச்சல் படத் தொடங்கி விட்டனர்.

இதனையடுத்து நான் அன்றிரவே கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தேன். முறைப்பாட்டுக்கு அமைய பொலீஸார் அன்றிரவும் மறு காலையும் சுகந்தனின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கில்லை. எங்கோ தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். விசாரித்துப் பார்த்த அளவில் அவர் தனது இரண்டாவது மனைவி வீட்டில் மறைந்திருக்கலாம் என ஊரவர்கள் சொல்கின்றனர்.

யாதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்பார்கள். கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாதவர்களின் கோழைத்தனமான இச் செயற்பாடுகள் அருவருக்கதக்கது.

சுகந்தன் போன்றவர்கள் மதுபோதைக்கும், பணத்திற்கும் எதனையும் செய்யக் கூடியவர்கள். தான் ஒரு பாடசாலையின் ஆசிரியராக இருக்கிறேன் என்ற பொறுப்புணர்வோ சமூகத்தைக் குறித்த எண்ணமோ  அவரிடமில்லை. ஒரு காலம் மக்கள் பிரதிநிதியாக செயற்பட்டேன் என்ற உணர்வும் அவருக்குக் கிடையாது. அப்படி இருக்குமானால் இவ்வாறு குழுவாகச் சேர்ந்து மது அருந்துவதும் அட்டகாசம் செய்வதும் நடக்குமா, எனவே எனது பாதுகாப்பு கருதி இப்பதிவை பொது வெளியில்  மேற்கொள்வதோடு, பொலீஸாரின் விசாரணைக்களுக்காகவும் சட்ட நடவடிக்கைக்காகவும் காத்திருக்கிறேன“.

No comments

Powered by Blogger.