மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்!

மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்கினால் எமது பிரதேச அபிவிருத்திகளை நாமே முன்னெடுக்க முடியுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் மு.முரளிதரனின் ஏற்பாட்டில் சித்தாண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அனைத்து அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்கின்றார்கள். அப்படியாயின் காலாகாலமாக இந்த பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற சிங்களப் பகுதிகள் தற்போது தேவலோகமாக மாறியிருக்க வேண்டும்.

மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள், நிதி மூலங்களைத் தந்தால் எமது மக்களுக்கான சேவைகளை நாங்களே செய்வோம். யாரிடமும் கையேந்த வேண்டிய நிலைமை ஏற்படாது.

இதனால் எமது தலைமை தொடர்பான தெரிவில் நாம் மிகவும் அவதாகமாகச் செயற்படவேண்டும். நாங்கள் தமிழர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பெரும்பான்மை இன கட்சிகள் எங்களுடன் வந்து சேருங்கள் எல்லாம் செய்து தருகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களிடம் இருந்து எடுக்கப்படுகின்ற பணத்தை நாங்கள் விரும்பியபடி வாழ்வதற்காக எங்களுக்குப் பிரித்துத் தரவேண்டும் என்றே நாங்கள் கோருகின்றோம்.

அந்த வகையிலான எமது போராட்டங்கள் மூலமே இந்த மாகாணசபைகள் வந்தன. மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள், நிதி மூலங்களைத் தந்தால் எமது மக்களுக்கான சேவைகளை நாங்களே முன்னெடுப்போம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.