வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி தவறியுள்ளார்!

காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடுவதாக தெரிவித்த இலங்கை ஜனாதிபதி இதுவரையில் அதனை வெளியிடவில்லை என ஐ.நா.வில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 73ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது அங்கு பக்க அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் நேற்றைய (சனிக்கிழமை) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவர் லீலாதேவி மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இறுதி கட்ட யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் நான் இங்கு கருத்து தெரிவிக்கின்றேன்.

நாம் எமது உறவுகளை தேடி தருமாறு வலியுறுத்தி கடந்த 580 நாட்களுக்கும் மேலாக வீதிகளில் அம்ந்து போராடி வருகின்றோம்.

குறிப்பாக யுத்தத்திற்கு பின்னர் ஓமந்தை சோதனை சவடியில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்த எனது மகன் அனுராஜிக்காக நான் காத்திருக்கின்றேன்.

அதேபோல் 2009 ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு காணாமல் போனவர்களின் தாய்மாராகிய நாம்; இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தோம்.

அப்போது காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனால் இதுவரையில் அதனை அவர் வெளியிடவில்லை.

நாட்டின் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதியே நிறைவேற்றப்படாத போது எவ்வாறு காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக இதற்கு தீர்வை காண்பது?

ஏன் இலங்கை அரசாங்கம் வீதிகளில் போராடும் எமக்கான தீர்வுகளை வழங்காது உள்ளது? அதாவது இராணுவ வீரர்களை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்க அனுமதிக்க போவது இல்லை என ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு தெரிவித்துள்ளமையே இதற்கு காரணம்.

எனவே இது தொடர்பான விசாரணைகளை துரிதமாக முன்னெடுத்து நீதியை வழங்குமாறு நான் ஐ.நாவிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.