குலசேகரப்பட்டினத்தில் ‘இஸ்ரோ’ ஏவுதளம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ஏவுதளம் அமைக்கப்பட வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறார்.
செப்டம்பர் 21ஆம் தேதி பிரதமருக்கு கனிமொழி எழுதியுள்ள கடிதத்தில்,
“இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இந்தியாவில் ஒரே ஓர் ஏவுதளம்தான் இருக்கிறது, அது ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ள பல நாடுகளும் ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் ஏவுதளங்களைப் பெற்றிருக்கின்றன. எனவே, இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட, ஸ்ரீஹரிகோட்டா தவிர மேலும் சில ஏவுதளங்களை அமைக்க வேண்டியது முக்கியமானதாகிறது.
இந்தப் பிரச்னை தொடர்பாக நான் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினேன். அதற்கு இஸ்ரோ அளித்த பதிலில், ‘இஸ்ரோவுக்கு புதிய ஏவுதளங்கள் அமைப்பதன் தேவை குறித்தும், ஏற்கெனவே இருக்கும் ஸ்ரீஹரிகோட்டா தளத்தின் செயல் திறன் குறித்தும், இஸ்ரோவின் அடுத்த பத்தாண்டுகளுக்கான ஏவுதளத் தேவைகள் குறித்தும் ஆராய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.
இதுமட்டுமல்ல... தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவராக இருந்து மறைந்தவருமான கலைஞர் 2013ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியிருந்தார்” என்று சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி,
“இஸ்ரோவின் ஓர் அங்கமாக இருக்கும் இந்திய அரசு அமைப்பான, ‘லிக்யுட் ப்ரொபல்ஷன் சிஸ்டம்ஸ் சென்டர்’ (திரவ உந்துவிசை பொறி மையம்) நிறுவனத்தின் முன்னாள் தலைமைப் பொதுமேலாளரின் கூற்றுப்படி, மங்கள்யான் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டிருந்தால் அது இப்போது சுமந்திருக்கக்கூடிய 1,350 கிலோ எடையுள்ள உபரகணங்களுக்குப் பதில், 1,800 கிலோ எடை கொண்ட உபரகணங்களைச் சுமந்து சென்றிருக்க முடியும்.
பூமத்திய ரேகைக்கு நெருக்கான தன்மை, மகேந்திரகிரியில் இருக்கும் திரவ உந்துவிசை மையத்திற்கு அருகே இருப்பது, உகந்த காலநிலை போன்ற காரணங்களால் குலசேகரப்பட்டினம் என்பது இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் அமைக்க சிறந்த இடமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இத்தகைய காரணிகளை முன்வைத்து இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளத்தினை தமிழ்நாட்டில் இருக்கும் குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கனிமொழி.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடப் போவதாக திமுக வட்டாரங்களில் செய்திகள் கசியும் நிலையில், கனிமொழி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கனிமொழி வட்டாரத்தில் இதுபற்றி விசாரிக்கையில், “2013 ஆம் ஆண்டில் இருந்தே இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதை வெறும் தேர்தல் அரசியலோடு முடிச்சிடாதீர்கள். தமிழ்நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட முக்கியமான விவகாரம் இது” என்கிறார்கள்.

No comments

Powered by Blogger.