வலி..!

வீரியரின் பூமியில்
ஆரியக் கூத்தும்
நரிகளின் தந்திரமும்
நாளாந்தம் நடக்கிறது.

விடுதலைக்கனி தேடி
சிறகடித்த பறவைகளின்
சங்கீதத்தில்
சுருதி விலகிய குரல்களின்
கூக்குரல்
இருள் கவிந்த இரவை நாடி
துடிப்பிழந்து
போகிறது.

மனிதநேய வறுமையில்
தவிக்கும் தரணிக்கு
மனிதப்பிணங்கள்
உண்டி நிரப்பும்
ஊனாகி
வீழ்கிறது.

துன்புறுவோரின்
துயர்துடைக்க
அன்பெனும் கிணறுவற்றி
இன்பெருக்கன்றி
இன்னலில் வீழ்கிறது
இனம்!

எங்கள்
பூந்தோப்பை
பெயர்த்து வீசிய
பிசாசுகளின் கால்களை
நக்கிப்பிழைக்கிறது
கால்சுற்றிய
நச்சுப்பாம்புகள்!

குருதிசொட்டும்
இருதய வலியில்
அருவியாகிப் பாய்கிறது
கோர நினைவுகளின்
குரூரம்!

மரபணுக்களின் பிழையாய்
மரத்துப்போய் கிடக்கிறது
உரத்துப் பேசிய உரிமைக்குரல்!

தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.