வரலாற்று துரோகம் வாழவிடாது!

ஓடும் ஒட்டகங்களே
ஒருசொல் கேளீர்!
வரண்ட பாலைவனத்தில்
பரிதாபத்துக்குரியவரே
பாரீர்!

எங்கள் வார்த்தைகளில்
ஊத்தை படர்ந்திருக்கவில்லை!
நாங்கள் அடர்ந்த காட்டுக்குள்
ஓடி ஓழியவுமில்லை!
வேடிக்கை மனிதராய்
விதண்டாவாதம் பேசி
வீழ்ந்துகிடக்கவுமில்லை!
நேற்றொரு கருத்தும்
இன்றொரு கருத்துமாய்
இனத்தின் ஆன்மாவை
மிதிக்கவும் இல்லை!

புறநானூற்றுத் தமிழ் பேசி
புறமுதுகு காட்டவும் இல்லை!
சிரமேறிய துரோகச்சிந்தனையில்
அறங்காக்க தவறவுமில்லை!
உங்கள் சுட்டுவிரல்கள் காட்டிய
எட்டப்பர்களோடு
தோள்மீது கைபோட்டு
நடக்கவுமில்லை!
மாவீரர் அறம் பாடிய வாய்களில்
புறம்பாடி திரியவுமில்லை!

நாங்கள் நாங்களாகவே
வாழ்கின்றோம்.
நாளைய விடுதலையின்
தூண்களாகவே
நிற்கின்றோம்.

இன்று
உன்னால் மாண்டவீரரின்
தியாகம் பேசமுடிகிறதா?
அன்று
ஆண்ட தலைவனுக்கு
பாவெழுதிய எழுத்தாணி
விளக்கெரிக்கவல்லவா
விளக்கமளிக்கிறது.
உன்
தலைக்கனத்தினை
நிறம்மாறும்
பச்சோந்திகளோடும்
முள்ளந்தண்டில்லாத
கருத்தியலாளிகளோடும்
வைத்துக்கொள்!

எங்களுக்குள்
அனலாக
எரிந்துகொண்டிருப்பது
விடுதலைத்தீ
மட்டும்தான்!
உங்களுக்குள்
புளுத்துக்கொண்டிருப்பது
தோண்டி எடுக்கப்பட்ட
பிணங்கள்
மட்டும்தான்!

வரலாறு உங்களை
ஒருபோதும்
மன்னிக்காது.
நாங்கள் வரலாற்றை
காப்பது
ஒருபோதும்
நிற்காது.

No comments

Powered by Blogger.