முப்பது ஆண்டுகள் ஆனதின்று..3ம் நாள்.!

கண்கள் குழி விழுந்து
காய்ந்து போய் கிடக்கிறான்
ஊற்றெடுத்து போல நல்
ஊரே நிறைந்து கிடக்கிறது
காசி அண்ணன் கவி சொல்ல
கரைந்து வழிந்தது வானம்
பாரதி வந்திருந்தாள்
பா வடித்து  புகழ்ந்தாள்
கஸ்தூரி உடனிருந்தாள்
கல் கசியும் கவி சொன்னாள்
மாதரெல்லாம் வீறு கொண்டு
மண் மீட்பில் தமை இணைக்க
பெருமையோடு நிமிர்ந்தது ஈழம்
பெரும் கனவு நனவாகும் நாள்
தொலைவில் இல்லை என்று
பார்த்தீபன் மனம் நிறைந்தான்
உடல் வலியால் துடித்த போதும்
உள உறுதி குலையாது கிடந்தான்
அடையாள உண்ணா நோன்புகளும்
ஆங்காங்கே நடந்தது
வீரத் திலீபன் புகழ் பாட
விண் அதிர்ந்து கிடந்தது
உலகத் தமிழர் நாவெல்லாம்
உத்தமன் திலீபன் பேச்சானான்
கார்த்திகையில் பிறந்த மைந்தன்
கண்ணெதிரே கரைந்த காட்சி கண்டு
கரையில்லா கடலைப் போல்
கட்டற்று கலங்கின தமிழர் உள்ளம்
கதிரவனும் உருகிடும் திலீபனின்
வெம்மை பொறுக்காது ஓடி ஒளிய
கட்டற்று வானம் கண்ணீர் சிந்த
கந்தனின் வீதியும் நனைந்து கலங்க
நள்ளிரவு தாண்டியும் உறங்க மறுத்து
திலீபன் உடல் சோர்ந்து கிடந்தது
பாரதம் வந்து பதிலொன்று தந்து
பார்த்தீபன் மீளானோ
என நாம் புழுங்கிக் கிடக்க
திலீபத்தின் பயணத்தில்
மூன்றாம் நாளும் முழுதாய் நகர்ந்து
முப்பது ஆண்டுகள் முப்பத்தொன்று ஆனதின்று...

#திலீபம்

#ஈழத்துப்பித்தன்
17.09.2017

தியாகதீபம் திலீபனுக்காக நல்லூரில் அமைக்கப்பட்ட முதலாவது தூபி 1995 காலப்பகுதியில் சிறீலங்கா படையினரால் இடித்தழிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.