விக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும்

வடக்கு மாகாண சபை இன்னும் ஒரு மாதத்தில் கலையவுள்ளது. அதன் பின்னர் விக்கினேஸ்வரன் எத்தகைய முடிவை
எடுப்பார் என்பது தொடர்பில் பல ஊகங்கள் உண்டு. அவற்றை ஊகங்களாகவே விட்டுவிடுவோம். ஆனால் 2013இல் அரசியலுக்குள் வரும்போது இருந்த விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சபை கலைகின்ற போது இல்லை என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. இந்தக் காலம் விக்கினேஸ்வரனுக்கு பல பாடங்களை புகட்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் காலம் விக்கினேஸ்வரனை அரசியல் வாதியாக செதுக்குவதற்கே பயன்பட்டிருக்கிறது.
விக்கினேஸ்வரன், அரசியலுக்குள் அழைத்துவரப்பட்ட போது அவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில், தான் அரசியல்வாதியில்லை என்றும், பாதிக்கபட்டிருக்கிற மக்களுக்கு கொஞ்சம் உதவியை வழங்குதில்தான் தான் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் வடக்கில் கால்பதித்த பின்னர் விக்கினேஸ்வரன் தன்னை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. அதுவே தமிழ் அரசியலின் யதார்த்தம். வடக்கின் அரசியல் யதார்த்தம் விக்கினேஸ்வரனுக்குள் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் மாற நேர்ந்தது ஆனால் இந்த விடயங்களை விளங்கிக் கொண்டு, விக்கினேஸ்வரனுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சம்பந்தன் ஆர்வம் காண்பிக்கவில்லை. உண்மையில் அனுபவமுள்ள சம்பந்தன் இந்த நிலைமைகளை விளங்கிக் கொண்டு செயற்பட்டிருந்தால், விக்கினேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து அன்னியப்பட்டிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அனுபவமுள்ள சம்பந்தன் அனுபமில்லாத சுமந்திரனுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து நிலைமைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கினார். இந்த நிலைமை விக்கினேஸ்வரனை ஒரு எதிரியாக பார்க்கும் நிலைமையை தமிழரசு கட்சிக்குள் உருவாக்கியது.
இந்த பின்புலத்தில் சிந்தித்தால், ஒரு முன்னைநாள் உச்சநீதிமன்ற நீதிபதியை தமிழரசு கட்சி நடத்தியிருக்கும் விதம் மிகவும் மோசமானது. அது தமிழ் அரசியல் எந்தளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பலருக்கு தீர்ப்பு எழுதிய விக்கினேஸ்வரன், இன்று தனக்கான தீர்ப்புக்காக நீதிமன்றம் செல்ல நேர்ந்திருக்கிறது. உண்மையில் சம்பந்தன் இவ்வாறானதொரு நிலைமையை அனுமதி;திருக்கக் கூடாது. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இதனை உறுதியாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் அனைவரும் அரசியல் சீரழிவை ஏதோவொரு வகையில் ரசிப்பவர்களாகவே இருகி;ன்றனர். பலவீனமான தமிழ்ச் சமூகத்தில் மேடையேறுபவர்கள் எல்லாம் அறிவாளிகள் போல் வலம் வருகின்றனர். சிங்கள மேலதிக்கதிற்கு எதிராக போராடுதாக கூறிக்கொள்ளும் தமிழ் அரசியல் வாதிகளின் அறிவு, இன்று விக்கினேஸ்வரனை அகற்றுவதற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
விக்கினேஸ்வரனை அரசியலுக்குள் கொண்டுவந்த போது அதனை சம்பந்தன் எப்படியெல்லாம் நியாயப்படுத்தியருந்தார் என்பதை இப்போது பலரும் மறந்திருக்கக் கூடும். நாங்கள் உலகத்தோடு பேச வேண்டும். அதற்கு விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் தேவை. நாங்கள் உலக வங்கியோடு பேச வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தோடு பேச வேண்டும் – விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் இல்லாமல் நாங்கள் எப்படிப் பேசுவது? என்றெல்லாம் பல விளக்கங்களை சம்பந்தன் அன்று முன்வைத்திருந்தார். வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக விவாதிப்பதற்காகவே 13.07.2013 அன்று, வவுணியாவிலுள்ள வசந்தம் உல்லாச விடுதியில் தமிழரசு கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. இதில் காளித் தாயறிய நான் விக்கினேஸ்வரனை கொண்டு வருவேன் என்று சூளுரைத்து மேசையில் அடித்து சத்தமிட்டவர் சம்பந்தன். இது பற்றி அப்போது கருத்துத் தெரிவிக்க முற்பட்ட சி.வி.கே.சிவஞானம் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலத்தை பார்த்து, உங்களின் மனதிலுள்ள அழுக்குகளை அகற்றுங்கள் என்று சத்தமிட்டவர் சம்பந்தன். ஏனெனில், அன்றைய சூழலில் தமிழரசு கட்சியிலிருந்த பலர் சம்பந்தனது முடிவுக்கு ஆதரவாக இருந்திருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் மாவை சேனாதிக்கே ஆதரவாக இருந்தார்கள். சம்பந்தன் அப்போது அதற்கு ஒரு தகுதி வேண்டும், ஒரு அடிப்படை வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தார். அதன் மூலம் மாவைக்கு அத்தகைய தகுதியில்லை என்பதை சம்பந்தன் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியில் மாவையை தகுதியற்ற ஒருவர் என்று ஒதுக்கினார். மேற்படி கூட்டத்தில் பங்குபற்றியிருந்த ஒரு மூத்த உறுப்பினர் அண்மையில் இதனை நகைச்சுவையாக நினைவுபடுத்தினார்.
இன்று இந்த சம்பவங்களை நினைக்கும் போது, ஒரு சிறந்த நகைச்சுவைக் காட்சியை பார்ப்பது போல் இருக்கிறதல்லவா! விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்தவரே, அவரை இரவோடு இரவாக பதவியிலிருந்து அகற்ற முற்பட்டார். இன்று நீதிமன்றத்தில் அவரை நிறுத்தியிருக்கின்றார். உலகவங்கியோடும் சர்வதேச நாணய நிதியத்தோடும் பேச வேண்டிய ஒருவர், நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் விக்கினேஸ்வரன் வலிந்து அரசியலுக்கு வந்த ஒருவரல்ல. ஓய்வு பெற்ற பின்னர் ஆண்மீகப் பணிகளில் திருப்தியுற்றிருந்த ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவரை முடிந்தவரை அவமானப்படுத்தும் ஒரு செயலையே இன்று சம்பந்தனும் தமிழரசு கட்சியும் செய்துமுடித்திருக்கிறது. எந்த மாவை அன்று தகுதியற்றவராக கருதப்பட்டாரோ, அந்த மாவை இ;ன்று தான்தான் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார். அன்று தகுதியற்றவராக கருதப்பட்ட மாவைக்கு இப்போது எப்படி தகுதி வந்தது? உண்மையில் இது யாழ்ப்பாண மக்களின் தகுதி தொடர்பானதேயன்றி, அசியல் வாதிகளின் தகுதி தொடர்பானதல்ல. தங்களை படித்த சமூகமென்று கருதிவரும் யாழ்;;ப்பாண சமூகம் தாங்கள் உண்மையிலேயே படித்த சமூகம்தானா என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது.
ஒரு அரசியல் கட்சிக்குள் முரண்பாடுகள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதனை ஒரு உறவு முரண்பாடாகக் கருதி, அதனை உள்ளுக்குள் தீர்த்துக் கொண்டு முன்நகர்வதுதான் வழமை. ஒரு கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்காக நீதிமன்றம் செல்ல நேர்கிறது என்றால், அந்தக் கட்சியின் தலைமை பிரச்சினைகளை கையாளும் ஆளுமையற்ற ஒன்றாக இருக்கிறதென்பதுதானே பொருள். அந்த வகையில் நோக்கினால் கூட்டமைப்புக்குள் எழும் எந்தவொரு பிரச்சினையையும் ஆக்கபூர்வமாக கையாளும் தகுதியற்ற ஒருவராகவே சம்பந்தன் இருந்து வருகிறார். சம்பந்தனின் தலைமைத்துவ குறைபாட்டின் காரணமாகவே கூட்டமைப்பு அதன் அரசியல் அனுகுமுறைகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆழமாக பார்த்தால், குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் அரசியல் பெரிதும் பலவீனப்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் தலைமையற்ற மக்களாக மாறிவருகின்றனர். இன்று ஆங்காங்கே மக்கள் மத்தியில் தோன்றும் அமைப்புக்கள் அந்தப் பகுதிய பிரச்சினைகளுக்காக வீதிக்கு வருகிறதென்றால், அதன் பொருள் கூட்டமைப்பு அவர்களின் பிரச்சினையை சரியாக கையாளவில்லை என்பதுதானே! கூட்டமைப்பு அந்த மக்களின் குரலாக இருந்திருந்தால் அவர்கள் தன்னிச்சையாக வீதிக்கு வரவேண்டிய தேவை வந்திருக்காது. அவ்வாறான செயற்பாடுகளும் ஆங்காங்கே பற்றி நூரும் செயற்பாடுகள்தான். அவற்றுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கப் போவதில்லை ஏனெனில் அதற்கான அரசியல் தலைமை மிகவும் பலவீனமாக இருக்கிறது.
இவ்வாறான சூழலில்தான் விக்கினேஸ்வரனது அரசியல் நிலைப்பாடும், அவர் அதில் கான்பித்துவந்த உறுதிப்பாடும் அவரை பலரும் நம்பிக்கையுடன் பார்ப்பதற்கு காரணமாகியது. ஆனாலும் இன்றுவரை அவரது அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது பற்றி ஆருடங்கள்தான் அதிகம். ஆனால் அவர் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் அவர் இனி கூட்டமைப்புக்குள் இருக்க முடியாது என்பதையே வெளிப்படுத்திநிற்கிறது. விக்கி, தனது அண்மைய உரையொன்றில் கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சிலோன்டுடே பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலொன்றில், கூட்டமைப்புக்கு என்று கொள்கையோ கட்டமைப்போ இல்லை. அதற்கென்று ஒரு பொதுச் சின்னமும் இல்லை. அப்படியான ஒன்றின் கைப்பாவையாக தான் இருக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரன் கூறுவது முற்றிலும் உண்மை. கூட்டமைப்பின் அனைத்து தவறுகளுக்கும் அதன் கட்டமைப்புசார் குறைபாடுகள்தான் காரணம். எனவே தோல்வியடைந்துவிட்ட ஒரு தலைமையின் கீழ் விக்கினேஸ்வரன் தர்க்கரீதியி;ல் இருக்க முடியாது. அதாவது அதன் கைப்பாவையாக இருக்க முடியாது. அவ்வாறாயின் அவரது பாதை எது?
உண்மையில் சீரழிந்து செல்லும் தமிழ் அரசியலை தற்காலிகமாக தூக்கிநிறுத்துவதற்கு ஒரு புதிய அரசியல் கூட்டு அவசியம். அவ்வாறான கூட்டு வெறும் கற்பனைகளைலிருந்து உருப்பெற முடியாது. அதே வேளை கூட்டமைப்பிலுள்ள குறைபாடுகளின் நீட்சியாகவும் அது அமைய முடியாது. விக்கினேஸ்வரன் கூட்டமைப்பி;ன் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றாரோ, அதே குற்றச்சாட்டுகளுக்கு அவர் தலைமை ஏற்க முடியாது. எனவே ஒரு தெளிவான உடன்பாடுள்ள, பொதுச் சின்னமொன்றை முன்நிறுத்துகின்ற, கட்டமைப்புரீதியில் உறுதிப்பாடுள்ள ஒரு புதிய அரசியல் கூட்டணி அவசியம். ஆனால் நிலைமைகளை உற்று நோக்கினால், அதற்கான தயாரிப்புகள் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. உண்மையில் அவ்வாறானதொரு அரசியல் கூட்டணியில், உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் காலத்தை கடத்தாமல் விரைந்து செயலாற்ற வேண்டும். இறுதி நேர கூடல்கள் பெரிய பலனைத் தராது. விக்கினேஸ்வரன் தற்போது மக்கள் நம்பிக்கையை பெற்ற ஒரு அரசியல் தலைவர். அதாவது வரும் போது இருந்த விக்கினேஸ்வரன் இப்போது இல்லை. காலம் விக்கினேஸ்வரனை ஒரு அரசியல் தலைவராக உருமாற்றியிருக்கிறது. அதே வேளை காலம் அவருக்கு ஒரு பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. அவர் அந்த பொறுப்பை தட்டிக்கழித்தால், இனிவரப்போகும் காலத்தில் அதுவும் பதிவாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.