மறுமலர்ச்சி பூத்திடப்பா...!அண்ணலே.!
கண்ணுக்குள் இன்றும் நீ
எண்ணிலா விம்பமாய் .....
எழுமதியாய்...எழும் சுடராய்...
ஆற்றமுடியாத் துயர் தந்து சென்றவனே...
நேற்றுப் போலுள்ளது நினைவெங்கும்.

தோற்றம் தந்த தாயாக உன்முன்
தோன்றி  வெற்றிச் சந்தண
திலகமிட்டாள் ஓடிவந்து ஒரு தாய்.

வேள்வித்தீயில் விறகாக
வெந்ததுன் ஊணுடம்பு...
வேகும் காட்டில்  கருகியது
உன் ஆன்மாப் பறவை.
ஆன்மாவின் கதறலை அகத்தீயில் பொசுக்கி
முப்புரம் எரித்த முந்தயவன் போல
குமிண் சிரிப்பால் அந்த
கொடிய வலி பொறுத்தாய்.
அடியவர் போல் மக்கள் தொழுதரற்ற
அகிம்சை தீ வளர்த்தாய்.

உயிரங்கு பசித்தீயில்
உருகுநிலை கண்டு
நல்லூர் முருகனும் உயிருறைந்து
சிறைப்பறவை ஆனான்.
கருகிக் கருகி மக்கள்
மனங்களிலே பூத்தாய்.
கடல் தாண்டி வந்தவரின்
கபடநிலை உரைத்தாய். உன்
ஐந்தம்சக் கோரிக்கை
இன்றுவரை மலரவில்லை.
ஏற்றிய கோரிக்கையை
எடுத்தியம்ப மறுக்கிறார்.
வெந்தணலாய் வேகியவுன்
தியாகச்  சூட்டிலே
கோடாரிக்காம்புகளோ விறைப்பெடுப்பு....
விருந்தாடல்....
காட்சிப் பொருளாக்கியுன்னை
காட்டுறார் கண்துடைப்பு
ஏற்றமிகு தியாகத்தை
ஏலத்திலே தள்ளுறார்.
நாற்றமிகு மனத்தோராய்
வாய் வீரம் காட்டுறார்.

மக்கள் புரட்சி வெடிக்கும் உன்
மனக் கனவு மலரும் நாள்.....
மந்திகளாய்  ஓடுமிந்த
மாய்மாலக் கூட்டங்கள்.

வீரனே!
விலையில்லா உயிரை
அணுவணுவாய்க் கரைத்தவனே!
மக்கள் மனங்களில் ஒரு
மறுமலர்ச்சி பூத்திடப்பா.
வெண்ணுடையில் வருவதெல்லாம்
வேசமென உரைத்திடப்பா
கள்ளக் குணத்தோரின்
கபடத்தை காட்டிடப்பா.

அண்ணலே.!
கண்ணுக்குள் இன்றும் நீ
எண்ணிலா விம்பமாய் .....
எழுமதியாய்...எழும் சுடராய்...

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Powered by Blogger.