கையில் மொபைல் வைத்திருக்கிறீர்களா?

சென்னை எத்தனையோ சம்பவங்களைத் தினமும் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் என அதன் பட்டியல் ஏராளம். ஆனால், எல்லாவற்றை விடவும் தற்போது மேலோங்கிய பயத்தைக் கொடுத்திருப்பவை வழிப்பறிக் கொள்ளைகள்.
நகைகளுடன் தனியே ஒரு பெண் இரவில் நடந்து செல்வதே சுதந்திரத்தின் அடையாளம் என்றார் காந்தி. இப்போது அவர் உயிருடன் இருந்திருந்தால், பகலில் மொபைல்போனுடன் ஓர் ஆண் தனியே நடந்து செல்வதுதான் சுதந்திரத்தின் அடையாளம் என ஒப்புக்கொள்வதாகக் கூறியிருப்பார்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் புறநகர் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் எதிர்கொண்டு வரும் பிரச்சினை மொபைல் கொள்ளையர்கள். செப்டம்பர் 20ஆம் தேதி, எண்ணூர் - மாதவரம் இடையேயான 200 அடி சாலையில் நடைபெற்ற சம்பவம், மொபைல் கொள்ளையர்களினால் ஏற்படக்கூடிய முழு ஆபத்துகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
அம்பத்தூரைச் சேர்ந்த விராகன் (46 வயது), சாலையோரமாக நடந்து செல்லும்போது தனது மொபைல்போனில் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் வந்த மூவரில், கடைசியாக உட்கார்ந்திருந்தவர், விராகனின் கையிலிருந்த மொபைல்போனைப் பிடுங்கியதும், ஸ்கூட்டர் மின்னல் வேகத்தில் சென்றிருக்கிறது. நடந்தது என்ன என்று விராகன் உணர்வதற்குள்ளாக வெகுதூரம் சென்றுவிட்டது ஸ்கூட்டர்.
விராகனிடமிருந்து தப்பிய அந்த மூவரும், தப்பிக்கும் நோக்கத்துடன் அதிவேகமாக ஸ்கூட்டரில் சென்றிருக்கின்றனர். சாலையின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்துக்குச் செல்வதற்காக, முன்னே சென்றுகொண்டிருந்த லாரியை முந்துவதற்காக ஸ்கூட்டரைத் திருப்பியபோது, அதன் பின்புறம் லாரியின் முன்புறத்தில் இடித்து மூவரும் கீழே விழுந்துவிட்டனர். இதில் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற சுகுமார் என்ற 18 வயது இளைஞன் லாரியின் சக்கரத்தில் சிக்கி அங்கேயே உயிரிழந்து விட்டார். இதனை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த இரண்டு நண்பர்களும், லாரி ஓட்டுநர் மணியைக் கீழே இழுத்துக் கண்டபடி தாக்கியிருக்கிறார்கள். அப்போது விழுந்த அடிகளில் ஒன்று, லாரி ஓட்டுநரின் கழுத்தில் பலமாகப்பட்டிருக்கிறது. இதனால், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டார். சாதாரணம் எனக் காவல் துறை அலட்சியப்படுத்தும் மொபைல் திருட்டில் தொடங்கிய இந்தச் சம்பவம் ஒரு விபத்தையும் கொலையையும் நடத்தி முடித்திருக்கிறது.
மொபைல் திருட்டு ஏன்?
மொபைல்போன் (ஸ்மார்ட்போன்) அத்தியாவசியமானதாகவும், கௌரவம் மிக்க ஒன்றாகவும் இன்று மாறிவிட்டது. உன் நண்பன் யாரென்று சொல்; நீ யாரென்று சொல்கிறேன் என்பது மாறி, உன் ஸ்மார்ட்போன் என்னவென்று சொல்; உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பதாக மாறிவிட்டது தற்போதைய உலகம். எனவே, கௌரவம் என்ற அடைப்புக்குறிக்குள் வந்துவிட்ட ஸ்மார்ட்போன் அதனை வாங்க இயலாதவர்களுக்கு ஒருவித ஏக்கத்தை உருவாக்குகிறது. இந்த ஏக்கம், பேராசையாக மாறி திருட்டு, கொலை, கொள்ளை என்ற வளையத்துக்குள் இயங்குகிறவர்களை எளிதாக மொபைல் கொள்ளையர்களாக மாற்றிவிடுகிறது.
மொபைல் தொலைத்துவிட்ட எத்தனையோ நபர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தும், அந்தக் கொள்ளையர்களைத் தேடிக் கண்டுபிடிக்காதது இப்படிப்பட்ட கொள்ளைகளுக்கு வழி வகுக்கிறது. இந்தக் கொள்ளையர்களின் சிஸ்டம் எப்படி வேலை செய்கிறது எனத் திருட்டு மொபைல்களை வாங்கி விற்கும் கடைகளில் மின்னம்பலத்தின் சார்பாக நேரில் சென்று சில தகவல்களைச் சேகரித்தோம். அதனால் தெரியவந்தவை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்துக்கும் இடையே நம்மை ஊசலாட வைக்கின்றன.
திருட்டு மொபைலினால் என்ன பயன்?
மொபைல் திருடர்கள் இரண்டு வகை. ஒன்று தானாக திருட்டுத் தொழிலுக்கு வருபவர்கள். மற்றொருவர், வேறொருவரால் இந்தத் தொழிலுக்குப் பழக்கப்படுத்தப்படுபவர்கள். தானாகத் தொழிலுக்கு வந்தவர்கள், திருடப்படும் மொபைல்களை இரண்டு வகையாகப் பயன்படுத்துகிறார்கள். ஒன்று, தாங்களே வைத்திருந்து பல மாதங்கள் கழித்துப் பயன்படுத்துவது. இரண்டு, உடனடியாகக் கடைகளில் விற்றுவிடுவது.
தாங்களே வைத்துக்கொள்வதற்காகத் திருடுபவர்கள் அவ்வப்போது தங்களது மொபைலை புதுப்பித்துக்கொள்வதற்காக இப்படிச் செய்கின்றனர். வெளியில் விற்பதற்காகத் திருடுபவர்கள் பகுதி நேரமாக இதனைச் செய்பவர்கள். பணம் தேவையென்றால் உடனே இரண்டிலிருந்து ஐந்து மொபைல்கள் வரை திருடி விற்கின்றனர். திருட்டு மொபைலின் விலை, அதன் உண்மையான விலையிலிருந்து 60 சதவிகிதம் வரை குறைக்கப்படுகிறது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் திருடுகின்றனர்.
தானாகத் திருட வந்தவர்களைவிட, மற்றவர்களால் திருடக் கற்றுத்தரப்பட்டவர்களினால் ஏற்படும் ஆபத்தும் இழப்பும் மிக அதிகம். ஒரு மொபைல் திருடப்பட்ட சில நிமிடங்களுக்குள் திருட்டுக் கும்பலின் தலைவனிடம் கொடுக்கப்படுகிறது. அதன்பின், மொபைலின் சொந்தக்காரர் தனது மொபைல் திருடப்பட்டதாக நினைக்கிறாரா அல்லது தொலைந்துவிட்டதாக நினைக்கிறாரா என்பதை அதற்கு வரும் போன் கால் மூலம் உறுதிப்படுத்துகின்றனர்.
திருடப்பட்டுவிட்டதை அறிந்திருந்தால், உடனே மொபைல் அணைத்துவைக்கப்படும். உரிமையாளர் தொலைத்துவிட்டதாக நினைப்பதாகத் தெரிந்தால், இந்த இடத்தில் கொண்டுவந்து கொடுக்கிறேன். ஆனால், அதற்கு ஒருநாள் ஆகும் எனச் சொல்லிவிடுவார்கள். எனவே, மொபைலின் உரிமையாளரும் அதற்காக எவ்வித புகாரும் கொடுக்காமல் காத்திருப்பார். அதற்குள், மொபைலில் இருக்கும் போட்டோ, வீடியோ உட்பட அனைத்துத் தகவல்களும் திருடப்பட்டுவிடும். கொஞ்சம் தொழில்நுட்பம் அறிந்த கும்பலிடம் சிக்கினால், வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட அனைத்தும் திருடப்படும்.
ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும், அதன் சம்பத்தப்பட்ட சர்வர் மட்டுமல்லாது ஸ்மார்ட்போனிலும் ஒரு நகல் எடுத்துவைக்கப்படும் என்பது ஸ்மார்ட்போன் நியதி. இப்படி எடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் தகவல்களை, மீண்டும் அதன் உரிமையாளரிடம் கொடுத்த பிறகு பயன்படுத்துகின்றனர். இதனால் பணத்தை இழந்தவருக்கு மொபைலைக் கொடுத்தவர் மேல் சந்தேகம் வராது. வேறு எப்படியோ தனது பணம் திருடப்பட்டுவிட்டதாகத் தோன்றும்.
திருட்டுத் தொழிலுக்குத் தானே வந்தவர்கள், பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என அனைவருக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை வாகனம், திருட வேண்டிய நபர், திருடப்படும் பொருள் என நீள்கின்றன.
வாகனம்:
மொபைல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் இரு வகைகள் இருக்கின்றன. வாகன நெருக்கடி அதிகம் இருக்கும் என்றால் ஸ்கூட்டர் மாடல் வாகனங்களையும், நெருக்கடி குறைவான இடங்களில் அதிக CC கொண்ட கியர் வைத்த வண்டிகளையும் பயன்படுத்துகின்றனர்.
கியரை மாற்றும்போது அவசரத்தில் வண்டி நின்றுவிடும் அபாயமும், நெரிசலில் தப்பிப்பதற்குள் அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியமும் இருப்பதால் கியர் வண்டிகளை நெரிசலான பகுதிகளில் தவிர்க்கின்றனர். அதுவே, இலகுவான சாலை என்றால் திடீரென பொருட்களைப் பறித்துவிட்டு, அந்த அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர் நிற்கும் சமயத்துக்குள் வண்டியை அடுத்தடுத்த கியருக்கு மாற்றி பறந்துவிடுகின்றனர்.
பதைக்க வைக்கும் கதைகள்
துரைப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி செல்லும் புறவழிச்சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது, சுங்கச்சாவடியைத் தாண்டியதும் ஓரமாக நின்றுகொண்டு போன் பேசிக்கொண்டிருந்த ஒருவரிடமிருந்து மொபைலைத் திருடிக்கொண்டு சென்றனர் இரண்டு இளைஞர்கள். 200CC பல்சர் NS பைக் அதிவேகமாகச் செல்வதைக் கண்டதும், அங்கிருந்த ஒருவருடன் பைக்கில் அவர்களைத் தொடர்ந்து சென்றார் மொபைலைப் பறிகொடுத்தவர். ஆனால், கடைசி வரை அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
எந்தக் குறுக்குச் சாலைகளும் இல்லாமல், இரண்டு பக்கமும் சதுப்பு நிலத்தால் அடைக்கப்பட்டிருக்கும் அந்தச் சாலையில் செல்வதற்கான ஒரே வழி பள்ளிக்கரணைக்கும் வேளச்சேரிக்கும் இடையேயான பாலம் மட்டும்தான். அதன் வாயிலிலேயே நின்று காவல் துறையினர் தடுப்பு ஏற்படுத்தி சோதனை செய்துகொண்டிருந்தனர். நடைபெற்ற சம்பவத்தைச் சொல்லி அந்த இளைஞர்களைப் பார்த்தீர்களா என்றால், ‘இல்லை. நாங்கள் சில வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்துகொண்டிருந்தோம்’ என்றார்கள். ஹெல்மெட் அணியாத ஒருவர் அதிவேகத்தில் ஓட்டி வந்த வண்டியை விட்டுவிட்டு காவல் துறை தனது கடமையை அங்கே ஆற்றிக்கொண்டிருந்ததை நினைத்து நொந்துகொள்வதா, இல்லை, தனது விலை உயர்ந்த ஸ்மார்ட்போனை தொலைத்துவிட்டு நின்றுகொண்டிருந்தவரைக் கண்டு பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
அம்பத்தூர் சம்பவத்தில் இறந்துபோன சுகுமாரின் மீதும் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. திருடுவது குற்றமென்று தெரிந்தே செய்தாலும், அதற்கு மரணம் பரிசல்லவே.
ஏன் ஹெல்மெட் அணிவதில்லை?
முகம் தெரிந்து அடையாளம் கண்டுகொள்ளும் ஆபத்து இருந்தும்கூட, இந்தத் திருடர்கள் முகத்தை மறைக்கும் ஹெல்மெட்டைத் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி இங்கு முக்கியமாகிறது. இதுகுறித்து, அனைத்துச் சட்டங்களையும் கடைப்பிடித்து பைக் ஓட்டும் சந்தோஷ் என்பவரிடம் கேட்டபோது, “ஹெல்மெட் அணிந்துகொண்டு வண்டி ஓட்டுவது தனி கலை. கண்கள் சாதாரணமாக 90 டிகிரி கோணத்தில் பார்க்கக்கூடியவை. அதிலும், கிட்டத்தட்ட 60 டிகிரி மட்டுமே முழு கவனத்துடன் பார்வைக்கு வரும். ஹெல்மெட் அணிந்துகொள்ளும்போது அந்த 60 டிகிரி மட்டுமே முழுவதுமாகத் தெரியும். திருடர்களுக்கு இது போதாது. தங்களுக்குப் பின்னால் யாராவது பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தினால் ஹெல்மெட்டைத் தவிர்த்துவிடுகின்றனர்” என்று கூறினார்.
இவ்வளவு திட்டமிட்டுத் திருடியபோதும் விபத்து ஏற்பட்டது எப்படி என்று கேட்டதற்கு “அவர்கள் சென்ற ஸ்கூட்டர் மாடல் அதிக எடையை இழுக்கக்கூடியதல்ல. அதிலும் மூன்று பேர் பயணம் செய்திருக்கிறார்கள். எனவே, இவ்வளவு ஆக்சிலேட்டர் கொடுத்து வண்டியைத் திருப்பினால், லாரிக்கு முன்பாக சென்றுவிடலாம் என்று கணித்திருப்பார்கள். ஆனால், வண்டியின் வேகம் நினைத்தபடி அதிகரிக்காததால், பின்புறம் மட்டும் லாரியில் இடித்துக் கீழே விழுந்திருக்கிறார்கள். மற்றபடி, லாரி டிரைவர் அடித்துக் கொல்லப்பட்டது பொதுவாகவே நடைபெறுவதுதான். சென்னையின் சாலையெங்கிலும் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. அவசரமான உலகத்தில் ஏற்படும் சாலை நெருக்கடியில், ஒவ்வொரு மனிதனும் கிட்டத்தட்ட மிருகமாகிவிடுகிறான். இவர்கள் ஏற்கனவே மிருகம்போல இருந்ததால் எளிதில் ஒரு கொலையை நிகழ்த்திவிட்டனர்” என்கிறார்.
காவல் துறையின் பங்கு என்ன?
விபத்துக்கு அடுத்ததாக நடைபெற்ற கொலைக்கான காரணத்தையும் சந்தோஷ் கூறிவிட்டதால் அடுத்து காவல் துறையின் பக்கம் கண்ணாடியைத் திருப்பினால், “எல்லாவற்றுக்கும் காவல் துறையையே குற்றம் சொல்லாதீர்கள்” என்று வழக்கம்போலவே இந்தப் பிரச்சினைக்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால், தனிமனித கவனம், ஒழுக்கம் ஆகியவற்றைக் குறைசொல்லிக் காவல் துறை தப்பித்துக்கொள்ள முடியாது. காணாமல் போகும் மொபைலின் IMEI எண்ணை வைத்து அல்லது சிம் கார்டு நம்பரை வைத்துக் குறிப்பிட்ட மொபைலை டிரேஸ் செய்து பிடிக்க வேண்டும் என்றால் அது காவல் துறை போன்ற அதிகாரம் பெற்ற துறைகளினால் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று. குறிப்பிட்ட எண்ணை டிரேஸ் செய்து எங்கிருக்கிறது எனக் கண்டுபிடிக்கும் வசதியைப் பொதுமக்கள் கையில் கொடுத்தால் என்னவாகும் என்பதை அனைவரும் அறிவர்.
காவல் துறை என்னதான் சொல்கிறது எனக் கேட்டால், பேசிய இருவரும் தங்களது பெயரைப் பயன்படுத்தாமல் குறிப்பிடுவதென்றால் பேசுகிறேன் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சொன்ன தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன.
“ஆமாம் சார். மொபைல் தொலைந்துவிட்டது என்று வருகிறவர்களிடம் கவனமாக இருக்கக் கூடாதா என்றுதான் கேட்கிறோம். காரணம், தவறே நடக்கக் கூடாது என்ற முற்போக்குத்தனம் அல்ல. அவர்களுக்கு உதவ முடியாமல் போகிறதே என்ற பரிதாப உணர்வும் குற்ற உணர்வும்தான் அப்படிப் பேசவைக்கிறது. நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள் அல்லவா. அப்படி, காவல் துறையில் இருக்கும் அத்தனை பேரும் அமர்ந்து காணாமல்போன மொபைல்களை டிரேஸ் செய்தால்கூட, அத்தனை வழக்குகளையும் முடிக்கச் சில பத்து ஆண்டுகள் ஆகும். அந்தளவுக்கு மொபைல் திருட்டு சகஜமாகி அதிகரித்திருக்கிறது. சிலரைப் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கும். சரி, இவருக்காவது உதவ முடிகிறதா என்று முயற்சி செய்தால், மேலிடத்து ஆர்டரே நிறைய இருக்கிறதென டெக்னாலஜி பிரிவில் இந்த ஃபைல்களை ஓரமாக வைத்துவிடுகின்றனர். டிபார்ட்மென்டிலேயே யாராவது தெரிந்தால் மட்டுமே, காணாமல் போன மொபைல்களைக் கண்டுபிடிக்க முடியும். இல்லையென்றால், அந்தப் புகார் கடிதங்களெல்லாம் அப்படியே கிடக்கும். சில மாதத்தில் எடைக்குப் போய்விடும்” என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, தானே ஒரு மொபைலைத் தொலைத்துவிட்டு கிடைக்காமல் இருப்பதாகக் கூறினார்.
மொபைல் திருட்டுதானே என்று சாதாரணமாக விட்டுவிட முடியாத அளவுக்கு இந்தக் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. அந்தத் திருட்டுகளின்போது நடைபெறும் விபத்துகளும், வன்முறைகளும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் போகப்போக இன்னும் மோசமான நிலையை எட்டும்.
பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் பெண் ஒருவர், உள்ளுணர்வின் காரணமாகத் தன்னை நெருங்கி வரும் பைக்கைப் பார்த்தபோது, அதிலிருந்த நபர் செயின் பறிக்க முற்படுவதை உணர்கிறார். சட்டெனப் பின்னோக்கிச் சென்றவரின் செயினைப் பறிக்காமல், கையிலிருந்த மொபைலைப் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுகிறார். இதனை விளக்கமாகச் சொல்லி தியாகராய நகர் காவல் துறையில் புகார் கொடுத்துக்கொண்டிருந்த பெண்ணின் மொபைல் விலையை விசாரித்தால் முப்பதாயிரம் என்கிறார். அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியின் மதிப்பு இருபதாயிரம் ரூபாய்தானாம்.
தங்கத்தைவிட விலைமதிப்பு அதிகமான பொருட்களை மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் வீட்டில் புகுந்து கஷ்டப்பட்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்கள், சாலையிலேயே தங்களது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டனர். இதனைக் கட்டுப்படுத்த என்ன வழிமுறையை காவல் துறை எடுக்கப்போகிறது என்று பார்ப்பதற்குள்ளாக இன்னும் எத்தனை கண்ணீர்த் துளிகளையும், உயிர்களையும் இந்த குற்றத்திற்குப் பரிசாகக் கொடுக்கப்போகிறோம் என்பதைப் பார்க்கும் சாட்சியமாக நாம் இருப்போம்.

No comments

Powered by Blogger.