நிர்மலா தேவி காவல் நீட்டிப்பு!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரையும், மேலும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, மாணவிகளைப் பாலியல் விவகாரத்தில் சிக்கவைக்க முயற்சிகள் மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அந்த மாணவிகளுடன் அவர் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கைத் தற்போது சிபிசிஐடி காவல் துறை விசாரித்து வருகின்றனர்.
நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இவர்கள் மூன்று பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மூவரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்து 11ஆவது முறையாக விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 10) ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திலகேஸ்வரி செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
சிபிசிஐடி காவல் துறையினர் ஏற்கனவே தாக்கல் செய்த 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை, செப்டம்பர் 14ஆம் தேதியன்று மூன்று பேரிடமும் வழங்கவுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.